டிடிவி தினகரன் ஜெயித்தால் கூட பரவாயில்லை, திமுக ஜெயிக்க கூடாது. சுப்பிரமணியசாமி
டிடிவி தினகரன் ஜெயித்தால் கூட பரவாயில்லை, திமுக ஜெயிக்க கூடாது என்றும் வருமானவரித் துறை சோதனை நடத்தினால் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டத்தில் சொல்லவில்லை என்றும் பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி கூறியுள்ளார்.
கேரள மாநிலம் பாலக்காட்டில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்வதற்காக, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியசாமி மும்பையில் இருந்து விமானம் மூலம் நேற்று கோவை வந்தார். அப்போது கோவை விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது:
ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும் பரவாயில்லை. தி.மு.க. ஒரு போதும் வெற்றி பெறக்கூடாது. வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினால், தேர்தல் ரத்து செய்யப்படும் என்று எந்த சட்டத்திலும் சொல்லப்பட வில்லை. வருமான வரித்துறை சோதனைக்கும் மத்திய அரசுக்கும் தொடர்பில்லை. இது அதிகாரிகளின் நடவடிக்கையாகும்.
தருண் விஜய் எம்.பி. தென்னிந்தியர்களை பற்றி பேசியது வெள்ளைக்காரன் எழுதி வைத்த புத்தகத் தை படித்து பேசியுள்ளார். நிறத்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை அனைவரும் ஒன்று தான். இதில் வேறுபாடு கிடையாது. நிறம் பற்றி பேசுவது தவறு.
டெல்லியில் போராடும் விவசாயிகள், என்னிடம் குறை எதையும் சொல்ல வில்லை. அவர்களின் போராட்டம் குறித்து எனக்கு எதுவும் தெரியாது. முல்லைப்பெரியார் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்ததன் பேரில் சுப்ரீம் கோர்ட்டில் இந்த வழக்கில் வெற்றி தேடி கொடுத்தேன்.
பாராளுமன்றத்தில் தமிழகம், புதுச்சேரி மாநிலங்களை சேர்ந்த 40 எம்.பி.க்கள் விவசாயிகளின் பிரச் சினை தொடர்பாக மத்திய விவசாய மந்திரியையும், பிரதமர் மோடியையும் சந்தித்து பேச வேண்டும். சசிகலாவை அடுத்து இன்னும் பலர் சிறைக்கு செல்வார்கள்.
ஜம்மு- காஷ்மீர் மட்டுமல்லாமல் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத அமைப்புகள் தமிழ்நாட்டில் ராமநாதபுரம் பகுதியிலும், கேரளாவிலும் இருப்பதாக தெரியவந்துள்ளது. இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா ஒரு கூட்டுப்படையை உருவாக்கினால் மட்டுமே இந்த அமைப்பை ஒழிக்க முடியும்.