ரகுராம் ராஜனை எவ்வளவு சீக்கிரம் நீக்க வேண்டுமோ அவ்வளவு சீக்கிரம் நீக்க வேண்டும். சு.சுவாமி
பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன்சுவாமி அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை நீக்க வேண்டும் என்றும் அவருடைய மோசமான நடவடிக்கையால்தான் வட்டி விகிதம் ஏறுவதாகவும் கூறியுள்ளார்.
சமீபத்தில் பா.ஜ.க.வின் ராஜ்யசபா எம்.பி.யாக நியமிக்கப்பட்ட சுவாமி, தான் கலந்து கொண்ட முதல் கூட்டத்திலேயே நாடாளுமன்றத்தில் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு, அதற்கு சபாநாயகரிடம் இருந்து கண்டனமும் பெற்றார். இந்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று சுவாமி செய்தியாளர்களிடம் கூறும்போது, ”ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் நமது நாட்டிற்கு சரியானவர் கிடையாது. அவருடைய நடவடிக்கைகள் வட்டி விகிதத்தை ஏற்றுவதாக இருக்கிறது. பணவீக்கத்தை கட்டுப்படுத்தவும், பொருளாதாரத்தை நிலைப்படுத்தவும் அவர் எடுத்த நடவடிக்கைகள் நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
என்னுடைய கருத்து என்னவென்றால், ரகுராம் ராஜனை, இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் பதவியில் இருந்து எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் நீக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.