சிலிண்டர் விலை திடீர் ஏற்றம்! கேரளா ஓட்டல்கள் வேலைநிறுத்தம்!

ஒரு குடும்பத்திற்கு ஒரு ஆண்டுக்கு 9 எரிவாயு சிலிண்டர்கள் மட்டுமே மானியத்துடன் வழங்கப்படும் அதற்கு மேல் தேவைப்பட்டால் மானியம் இல்லாத சிலிண்டர்களைத்தான் வாங்கவேண்டும் என்று உத்தரவிட்ட மத்திய அரசு நேற்று அதிரடியாக மானியம் இல்லாத சிலிண்டரில் விலையை ரூ.220 வரை உயர்த்தியுள்ளது. இந்த விலையேற்றம் உடனடியாக அமலுக்கு வந்துள்ளதால் நாடு முழுவதும் உள்ள பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சென்னையில் இதுவரை மானியம் இல்லாத சிலிண்டர் ரூ.1,014க்கு விற்கப்பட்டு வந்தது. நேற்று மத்திய அரசின் உத்தரவு வந்தவுடன் சிலிண்டரின் விலை ரூ.1,234 ஆக உயர்ந்துள்ளது. மானியத்துடன் உள்ள சிலிண்டரில் விலையில் மாற்றமில்லை என்று அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசின் இந்த திடீர் விலையேற்றத்தை கண்டித்து இன்று கேரளா முழுவதும் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தத்தை அந்த மாநில ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. எனவே இன்று காலைமுதல் கேரளா முழுவதும் எந்த ஓட்டல்களும் திறக்கவில்லை. தமிழகம், மற்றும் ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து சென்றுள்ள ஐயப்ப பக்தர்கள் ஓட்டல்கள் வேலைநிறுத்தத்தால் கடும் அவதியை சந்தித்து வருகின்றனர் என அங்கிருந்து வரும் செய்திகள் கூறுகின்றன. தமிழக ஓட்டல் உரிமையாளர் சங்கமும் வேலைநிறுத்தம் செய்ய ஆலோசித்து வருகின்றன.

இந்த விலையேற்றத்திற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, கேரள எதிர்க்கட்சி தலைவர் அச்சுதானந்தன் உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply