ஆஸ்திரேலியாவில் நடுவானில் விமானம் சென்றுகொண்டிருந்த போது விமானிக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் மயங்கிவிழுந்தார். அந்த விமானத்தில் வந்த 19 வயது வாலிபர் ஒருவர் சமயோசிதமாக விமானத்தை தரையிறக்கினார்.
ஆஸ்திரேலியாவை சேர்ந்த டெரக் நெவிலி என்ற விமானி நேற்று செஸ்னா 150 என்ற சிறிய ரக விமானத்தை ஓட்டிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென விமானிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டு வலியால் துடித்தார். இதை தற்செயலாக பார்த்த அந்த விமானத்தில் இருந்த 19 வயது இளைஞர் ஜென்கின்ஸ் அவருக்கு உதவ முன்வந்தார். ஆனால் விமானி மயங்கிவிழுந்துவிட்டார். பின்னர் விமான கட்டுப்பாட்டு அறைக்கு தொடர்பு கொண்ட ஜென்கின்ஸ் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி விமானத்தை பத்திரமாக தரையிறக்கி அனைவரது உயிரையும் காப்பாற்றினார்.
மயங்கிய நிலையில் இருந்த விமானியை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தனர். தற்போது அவர் நலமாக இருக்கிறார். அனைவரது உயிரையும் காப்பாற்றிய ஜென்கின்ஸை விமான நிலைய ஊழியர்கள் அனைவரும் பாராட்டினர். ஜென்கின்ஸ்க்கு ஏற்கனவே ஓரளவுக்கு விமானம் ஓட்டத்தெரியுமாம். ஏற்கனவே ஒருமுறை விமானத்தை ஓட்டி பத்திரமாக தரையிறக்கிய அனுபவமும் அவருக்கு இருந்ததாக தெரியவந்துள்ளது.