இந்திய – பாகிஸ்தான் எல்லையில் அமைந்துள்ள வாகா எல்லைச் சாவடியில் நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதல் ஒன்றில் பாகிஸ்தான் 55 பேர் பரிதாபமாகஉயிரிழந்தனர். இவர்களில் பாகிஸ்தான் நாட்டு பாதுகாப்புப் படையினர் 3 பேர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த தாக்குதலில் சுமார் 200 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண காவல் துறை அதிகாரி ஒருவர் செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில், “இரு நாட்டு தேசியக் கொடிகளையும் இறக்கும் நிகழ்ச்சியைக் பார்க்க வாகா எல்லையில் தினமும் ஏராளமானோர் வருவதுண்டு. நேற்றைய தினம் இந்த நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அந்த பகுதியில் இருந்து அனைவரும் வெளியேறிக் கொண்டிருந்த போது, அங்குள்ள நுழைவுப்பகுதியில் சந்தேகப்படும்படியாக இருந்த ஒரு மர்ம நபர் ஒருவரை பாதுகாப்பு படையினர் நிறுத்தி விசாரணை செய்துகொண்டிருந்தபோது, திடீரென அந்த மர்ம நபர் தனது உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்தார்.
இந்தத் தாக்குதலுக்கு அல்-காய்தாவுடன் தொடர்புடைய ஜந்துல்லா என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக பாகிஸ்தான் பத்திரிகைகள் கூறுகின்றான. வசிரிஸ்தான், ஜார்ப்-இ-அஜப் பகுதிகளில் நடத்தப்பட்டு வரும் தாக்குதல்களுக்குப் பதிலடியாக இத்தாக்குதல் நடத்தப்பட்டதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 20 வயது இளைஞர் ஒருவர், 25 கிலோ வரை வெடி பொருள்களை தனது உடலில் கட்டிவந்து வெடிக்கச் செய்ததாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.