சவுதி அரேபியா: மதீனா அருகே தற்கொலைப்படை தாக்குதல். 4 பேர் பலி
இஸ்லாமியர்களின் புனித வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான மதினா அருகே தற்கொலைப்படயினர் நடத்திய கொடூர தாக்குதலால் 3 பேர் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இஸ்லாமியர்கள் நாளை உலகம் முழுவதும் ரம்ஜான் கொண்டாடவுள்ள நிலையில் மதீனாவில் வெடிகுண்டு தாக்குதல் நடந்திருப்பது பலத்த அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. மதீனா தவிர மேலும் இரண்டு இடங்களில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகவும், இந்த சம்பவங்களால், சவுதி அரேபியா முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.
சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில், அமெரிக்க தூதரகம் அருகே தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய முதல் தாக்குதலில் தூதரக பாதுகாப்பு அதிகாரிகள் 2 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து புனித வழிபாட்டு தலமான மதீனாவில் தற்கொலைப்படை தீவிரவாதி நடத்திய தாக்குதலில் தற்கொலை படையை சேர்ந்தவர் மட்டும் உடல் சிதறி பலியானார். இந்த தாக்குதலில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனால் மூன்றாவது தாக்குதலான மதீனா நகரில் ராணுவ தலைமையகம் அருகே உள்ள மஸ்ஜித்-இ-நப்வி என்னும் இடத்தில் நடைபெற்ற தாக்குதலில் 3 பேர் பரிதாபமாக கொல்லப்பட்டனர். இதனால் அப்பகுதி முழுவதும் கரும்புகை சூழ்ந்து, போர்க்களமாக காட்சியளித்தது.
ஒரே நாளில் அடுத்தடுத்து மூன்று இடங்களில் தற்கொலை படையினர் தாக்குதல் நடத்தியிருப்பது ரம்ஜான் கொண்டாட தயாராகி வரும் இஸ்லாமியர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு சவுதி அரேபியா அதிபர் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.