வெயில் காலம் வந்தாலே பலரும் சுருண்டுபோய்விடுவார்கள். குளிர்ச்சியாக எதாவது கிடைத்தால், விரும்பி சாப்பிடுவார்கள் அல்லது குடிப்பார்கள். இந்த வெயில் காலத்தை அருமையான வாய்ப்பாக மாற்றிக்கொண்டு காசு சம்பாதித்து வருகிறார்கள் இரண்டு பிசினஸ்மேன்கள். இந்த இருவரில் நாம் முதலில் சந்தித்தது மதுரையைச் சேர்ந்த தமிழ்ச்செல்வியை.
சர்க்கரை பூசணி சாக்லேட்!
”சம்மர் சீஸன் என்றதுமே குஷியாவது பள்ளி மாணவர்கள்தான். வெயிலில் எப்போதும் அலைந்து கொண்டிருப்பார்கள். வெயிலில் விளையாடுகிறார்களே, அவர்களுக்கு குளிர்ச்சியாய் ஏதாவது கொடுக்கலாம் என்று பார்த்தால், டேஸ்ட் பிடிக்கவில்லை என்று ஒதுக்கிவிடு வார்கள். சர்க்கரை சேர்த்த இனிப்புப் பானங்கள், அதுவும் ஜில்லென்று இருக்க வேண்டும் என்பார்கள். எனவே, அவர்கள் விரும்பும்வகையில் சமையலில் ஏதாவது செய்யவேண்டும் என்ற ஆசையில் புதிது புதிதாக சில உணவு வகையை செய்துபார்க்கத் தொடங்கினேன்.
இதில் சர்க்கரை பூசணி சாக்லேட்டுக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இந்த சாக்லேட் தயாரிக்கப் பூசணியை நன்றாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர் அதனோடு வெல்லக் கரைசலை சேர்த்து நன்கு காய்ச்ச வேண்டும். இது பதத்துக்கு வந்ததும் பெரிய தட்டில் கொட்டிவிட வேண்டும். பின்னர் சூடு ஆறியதும் சின்னச் சின்ன பார்களாக கட் செய்துகொள்ளலாம். இதை ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென்று குழந்தைகளுக்குத் தரலாம்.
ஆரம்பத்தில் என் குழந்தைகளோடு சேர்ந்து விளையாடும் நண்பர்களுக்குத் தந்தேன். அவர்கள் அதை விரும்பிச் சாப்பிடவே, மற்றவர்களுக்கும் கொடுக்க ஆரம்பித்தேன். இப்படி உறவினர்கள், நண்பர்கள் எனப் பலருக்கும் கொடுக்க, இன்றைக்கு நான் தயாரிக்கும் சாக்லேட்களுக்குப் பலத்த வரவேற்பு.
இதற்காக நான் பெரிய அளவில் முதலீடு ஏதும் செய்யவில்லை. ஆரம்பத்தில் இதை பிசினஸாகக்கூட நான் நினைக்கவில்லை. குழந்தைகள் விரும்பிச் சாப்பிடுவதற்காகத்தான் இதையெல்லாம் செய்ய ஆரம்பித்தேன். இப்போதைக்கு சிறிய அளவில் இந்த பிசினஸை செய்துவருகிறேன். ஆனாலும் நல்ல லாபம் கிடைக்கிறது. இதை இன்னும் பெரிய அளவில் செய்யப்போகிறேன். இன்னும் பல புதுப்புது உணவு வகைகளையும் அறிமுகம் செய்யப்போகிறேன்” என்றார் தமிழ்ச்செல்வி.
குளிர்பானங்களுக்கு சவால்விடும் இளநீர்!
சாலையோரங்களில் இருக்கும் கடைகளில் இளநீர் வாங்கிக் குடிப்பதுதான் நமக்கு வழக்கம். ஆனால், பலவகையான குளிர்பானம்போல இளநீரும் இப்போது பாட்டில்களில் அடைத்து விற்கப்படுவதால், இனி இளநீர் கடைகளைத் தேடி அலைய வேண்டியதில்லை. இளநீரை பாட்டில் களில் அடைத்து விற்று வருகிறார் கோவையைச் சேர்ந்த வரதராஜன். அவருடன் பேசினோம்.
”2005-ல் நான் மும்பையில் இருந்த போது இளநீர் விற்பவர்களைப் பார்த்துள்ளேன். இளநீர் குடித்துவிட்டு, வீட்டுக்கும் எடுத்துச் செல்கிறவர்கள் மேற்பகுதியை மட்டும் சீவி வாங்கி எடுத்துச் செல்வார்கள். இதுபோன்று ஐந்து அல்லது ஆறு இளநீரை எடுத்து செல்வது கடினம். இந்தக் காட்சியைப் பலமுறை பார்த்திருக்கிறேன். நாங்களே தென்னை மரங்கள் வைத்திருந்ததால், ஒரு யோசனை தோன்றியது. எளிதாகக் கிடைக்கும் தண்ணீரையே பாட்டிலில் அடைத்து, கூடுதல் விலைவைத்து விற்கும்போது மக்கள் வாங்கத் தயாராக இருக்கின்றனர். இந்த இளநீரை நாம் ஏன் பாட்டிலில் அடைத்து விற்கக்கூடாது என்று நினைத்தேன்.
ஆனால், அது அவ்வளவு சாதாரண விஷயமில்லை. காரணம், ஒரு இளநீரை நாம் வெட்டிவிட்டால், மூன்று அல்லது நான்கு மணி நேரத்தில் கெட்டுவிடும். எனவே, இந்த இளநீரை எப்படி பாட்டிலில் அடைத்து விற்பது என்று யோசித்தேன். அதற்காக மூன்று வருடங்கள் தொடர்ந்து ஆராய்ச்சி மேற்கொண்டேன். இந்தத் திட்டம் வெற்றி பெற்றுவிட்டால் மக்கள் இளநீரை, மற்ற குளிர்பானங்கள் போன்று கையில் எடுத்துச் செல்லும் நிலை வந்துவிடும். இதனால் மக்களின் ஆரோக்கியத்துக்கும் நல்லது. தென்னை விவசாயிகளுக்கும் நன்மை பயக்கும்.
இந்த பிராசஸில் பல தோல்விகளைக் கண்டு மனம் தளராமல் தாண்டி வந்தேன். கோவை வேளாண்மை பல்கலைக்கழகத்தோடு இணைந்து செய்ததால் துறை சார்ந்த வல்லுநர்கள் உதவியோடு இதைச் செய்தேன். பிறகு 2008-ம் ஆண்டு இதற்கான தொழில்நுட்பத்தைக் கண்டறிந்து செய்ய ஆரம்பித்தோம். சுவை, ஊட்டசத்து, தரம் ஆகிய மூன்றையும் குறித்து கவனமாக இருந்தோம். இந்த மூன்றுக்காகவும் எந்தவொரு வேதிப்பொருளையும் நாங்கள் சேர்ப்பதில்லை.
தற்போது பள்ளி, கல்லூரி எனப் பல இடங்களில் சோதனை செய்துபார்த்ததில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. 250 மி.லி அடங்கிய இளநீர் 30 ரூபாய்க்கு விற்கிறோம். ஒரு இளநீரை நீங்கள் கடையில் வாங்கும்போதும் இதே விலைக்கே கிடைக்கிறது.
இதற்கான தேங்காய்களை நாங்களே நேரடியாகத் தோப்புகளுக்குச் சென்று கொள்முதல் செய்து அந்த இளநீர்களை வெயில்படாமல் பாதுகாத்து பிறகு தண்ணீரை எடுத்து அதைப் பதப்படுத்திப் பாட்டிலில் அடைக்கிறோம். இந்த இளநீரை குளிர்சாதனப்பெட்டியில் வைத்திருந்தால் ஒரு மாதம் வரை கெடாது. இந்த நாட்களை இன்னும் அதிகப்படுத்தவும் விலையைக் குறைக்க வும் முயற்சிசெய்து வருகிறோம்.
இதைக் கடைகளில் வைத்து விற்கும்போது மற்ற பானங்களைப்போல் அல்லாமல் சில விஷயங்களைக் கவனிக்க வேண்டும். இதற்கான பயிற்சியைக் கடைகளுக்கு அளித்து வருகிறோம். இதற்குத் தயாராக இருக்கும் கடைகளில் மட்டுமே நாங்கள் விற்பனை செய்ய அனுமதித்துள்ளோம். வாடிக்கையாளர்கள் மத்தியிலும் குழந்தைகள் மத்தியிலும் இது நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. வெயில் காலத்தில் குழந்தைகளுக்கு மற்றக் குளிர்பானங்களைக் கொடுப்பதைவிட இந்த இளநீரைத் தந்தால், அவர்களின் உடலும் மனமும் குளிரும்” என்றார்.
சீஸனுக்கேற்ப தொழிலுக்கான வாய்ப்பை உருவாக்கிக்கொள்வது நம் கையில்தான் உள்ளது என்பதற்கு இந்த பிசினஸ்மேன்கள் நல்ல உதாரணம்!