ஆண்களின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறதா? சபரிமலை நிர்வாகத்திடம் சுப்ரீம் கோர்ட் சரமாரி கேள்வி
சபரிமலையில் பெண்களை அனுமதிப்பது தொடர்பான வழக்கு ஒன்று சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. இந்த விஷயத்தில் கேரள அரசு தலையிடாது என்றும் சுப்ரீம் கோர்ட் நல்ல முடிவு எடுக்கும் என தான் நம்புவதாகவும் முதல்வர் உம்மன்சாண்டி நேற்று கூறியதை பார்த்தோம்.
இந்நிலையில் இந்த வழக்கு சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் தீபக் மிஷ்ரா, கோபால் கெளடா, குரியன் ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இந்த விசாரணையில் பெண்களின் மாதவிடாய் காலங்களில் கோவிலுக்குள் வரக்கூடாது என்பது பாரம்பரியமாக பின்பற்றப்பட்டு வருவதாகவும் அதன் காரணமாகவே பெண்களை சபரிமலையில் அனுமதிப்பதில்லை என்றும் கோவில் நிர்வாகம் தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது நீதிபதிகள் பல்வேறு முக்கியமான கேள்விகளை முன்வைத்தனர். குறிப்பாக மாதவிடாய் பிரச்னையை காரணம் காட்டி வயது வந்த பெண்களை கோவிலுக்குள் அனுமதிக்க ஏன் மறுக்கிறீர்கள்? இவர்கள் கோவிலுக்குள் வருவதால் கோவிலின் தூய்மை கெடும் என எப்படி சொல்கிறீர்கள் ? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
மேலும் பெண்களின் தூய்மையை மாதவிடாயுடன் தொடர்புப்படுத்தி பார்கிறீர்களா? என்றும், உடலியல் சார்ந்த விஷயங்கள், ஆண், பெண் இன பாகுபாட்டிற்கு வழிவகுக்குமா? என்றும் சரமாரியாக நீதிபதிகள் கேள்விகளை எழுப்பியதால் நீதிமன்ற வளாகமே பரபரப்பு அடைந்தது. மேலும் பெண்களுக்கு விதிக்கப்படும் இந்த கட்டுப்பாடுகள், சோதனைகள் ஆண்களுக்கும் விதிக்கப்படுகிறதா? எனவும், ஆண்களின் தூய்மை பரிசோதிக்கப்படுகிறதா என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.