மும்பை குண்டுவெடிப்பு குற்றவாளிக்கு ஜூலை 30ஆம் தேதி தூக்கு தண்டனையா?
மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில் குற்றவாளி என நீதிமன்றத்தில் நிரூபணம் செய்யப்பட்ட யாகூப் மேமனின் தூக்குத் தண்டனையை சுப்ரீம் கோர்ட் உறுதி செய்துள்ளதால், வரும் 30ஆம் தேதி இந்த தூக்கு தண்டனை நிறைவேற்றப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 1993 ஆம் ஆண்டு மார்ச் 12 ஆம் தேதி மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் 257 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 713 பேர் படுகாயமடைந்தனர். இந்தக் கொடூர தாக்குதல்களுக்கு மூளையாகச் செயல்பட்ட தாவூத் இப்ராகிம் மற்றும் டைகர் மேமன் ஆகியோர் தொடர்ந்து பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படும் நிலையில் அவர்கள் இருவரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இதில் மற்றொரு முக்கிய குற்றவாளியும், டைகர் மேமனின் சகோதரருமான யாகூப் மேமன் உள்பட ஏராளமானோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு மும்பை தடா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனை விதித்து சமீபத்தில் தீர்ப்பு வழங்கியது. பின்னர் இந்த தீர்ப்பு மும்பை உயர்நீதி மன்றத்தால் உறுதியும் செய்யப்பட்டது.
தூக்கு தண்டனையை எதிர்த்து யாகூப் மேமன் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், யாகூப் மேமனின் தூக்கு தண்டனையை உறுதி செய்து கடந்த 2013ஆம் ஆண்டு மார்ச் 21 ஆம் தேதி தீர்ப்பு வழங்கியது. இதை அடுத்து யாகூப் மேமனின் கருணை மனுவும் குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், யாகூப் மேனனின் தூக்கு தண்டனையை உச்சநீதிமன்றம் இன்று உறுதி செய்ததுடன், அவரது மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, யாகூப் மேனன் வரும் 30ஆம் தேதி தூக்கிலிடப்படலாம் என செய்திகள் வெளியாகியுள்ளன.