சிதம்பரம் நடராஜர் கோவிலில் தமிழக அரசு நியமனம் செய்த செயல் அதிகாரிகள் உத்தரவு செல்லாது என்று நேற்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளதால் மீண்டும் தீட்சதர் வசம் செல்கிறது சிதம்பரம் கோவில் நிர்வாகம்.
சிதம்பரம் நடராஜர் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் அதிகளவு நடப்பதால் அந்த கோவிலின் நிர்வாகத்தை தமிழக அரசே ஏற்று நடத்த முடிவு செய்து தீட்சதர்களை நீக்கிவிட்டு புதிதாக செயல் அதிகாரிகளை நியமித்தத்து. இதற்கு தீட்சதர்கள் தரப்பில் இருந்து கடும் எதிர்ப்பு வெளிப்பட்டது. செயல் அதிகாரிகள் நியமனத்தை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தீட்சதர்கள் வழக்கு தொடர்ந்தனர். தமிழக அரசின் செயல் அதிகாரிகள் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்ததால் தீட்சதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர்
நேற்று உச்சநீதிமன்றத்தில் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தில் முறைகேடுகள் ஏற்பட்டால் தற்காலிகமாக ஒரு அதிகாரியை நியமனம் செய்ய மட்டுமே தமிழக அரசுக்கு அதிகாரம் உண்டு என்றும், நிரந்தரமாக செயல் அதிகாரியை நியமனம் செய்வதை ஏற்க முடியாது என்றும் அதிரடியாக தீர்ப்பு கூறியதோடு செயல் அதிகாரி நியமனம் செல்லாது என்றும் நீதிபதிகள் கூறினர். இதனால் மீண்டும் சிதம்பரம் கோவில் நிர்வாகம் தீட்சதர்கள் கட்டுப்பாட்டுக்கு வருகிறது.