நுழைவுத்தேர்வு அவசர சட்டத்திற்கு தடையா? சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு
எம்.பி.பி.எஸ் உள்பட மருத்துவ படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு கட்டாயம் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டது. இதன் காரணமாக மே 1 மற்றும் ஜூன் 24 என இரண்டு கட்டமாக நுழைவுத்தேர்வு நடத்த முடிவு செய்யப்பட்டு முதல்கட்ட நுழைவுத்தேர்வு நடந்து முடிந்தது. இந்த நிலையில் தமிழகம் உள்பட ஒருசில மாநிலங்கள் தங்கள் மாநிலத்தில் நுழைவு தேர்வு தேவையில்லை என்றும் 12ஆம் வகுப்பு மதிப்பெண் மற்றும் கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர்க்க அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி இதற்கான அவசர சட்டம் ஒன்றை மத்திய அரசு இயற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தியது. இதனை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு சமீபத்தில் இதற்கான அவசர சட்டத்தை இயற்றி அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றது.
இந்த நிலையில் மத்திய அரசின் இந்த அவசர சட்டத்தை எதிர்த்து மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் தரப்பில் உச்சநீதிமன்றம் நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், இந்த அவசர சட்டம் சட்ட விரோதமானது என்றும், அரசியல் சட்டத்துக்கு எதிரானது என்றும், எனவே இந்த அவசர சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் சில மாணவர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், “மத்திய அரசின் அவசர சட்டத்துக்கு எதிராக ஏதேனும் மனு தாக்கல் செய்யப்பட்டால் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக் கொண்டு விசாரிக்க வேண்டும் என்றும், தங்களை விசாரிக்காமல் அவசர சட்டத்துக்கு தடை எதுவும் விதிக்கக் கூடாது என்றும் கூறியிருந்தனர்.
இந்நிலையில், ஆனந்த் ராய் மற்றும் மருத்துவ மாணவர் சஞ்சீவ் சக்சேனா ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது. மருத்துவ நுழைவுத் தேர்வு தொடர்பான அவசர சட்டத்திற்கு தடைவிதிக்க முடியாது என்று கூறியதோடு, பொது நுழைவுத் தேர்வை மத்திய அரசு முழுமையாக மறுக்கவில்லை. தேர்வில் இருந்து சில மாநிலங்களுக்கு விலக்கு மட்டுமே அளிக்கப்பட்டு உள்ளது. தற்போது ஏதேனும் உத்தரவு பிறப்பித்தால் குழப்பம் ஏற்படும். தற்போது தடை விதிக்க முடியாது என்று கருத்து தெரிவித்துள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த தீர்ப்பால் தமிழக மாணவர்கள் உள்பட பல மாநில மாணவர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.