பாலிவுட் நடிகர் அமீர்கானுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை உச்சநீதிமன்றம் இன்று அதிரடியாக தள்ளுபடி செய்துவிட்டது. சினிமா என்ற பொழுதுபோக்கை அதன் போக்கில் விட்டுவிடும்படியும், இதில் தடையேதும் விதித்து படத்தயாரிப்பாளரின் உரிமையை பாதிக்க செய்ய முடியாது என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.
அமீர்கான் நடிப்பில் விரைவில் வெளிவர இருக்கும் பாலிவுட் திரைப்படம் பி.கே. இந்த படத்தின் புரமோஷன் ஒன்றுக்காக அமீர்கான் சமீபத்தில் அரைநிர்வாண போஸ் ஒன்றை கொடுத்தார். இதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை இன்று உச்சநீதிமன்றம் விசாரணை செய்தது.
மனுவை விசாரணை செய்த நீதிபதிகள், “சினிமா என்பது கலை மற்றும் பொழுதுபோக்கு சம்பந்தப்பட்டது. ஆகவே அது அதன் போக்கிலேயே இருக்கட்டும். இதில் தடை ஏதும் விதிக்கப்படுமானால் அது படத்தயாரிப்பாளரின் உரிமையை பாதிக்கும். இப்படத்தை பார்க்க விருப்பம் இல்லையென்றால் அதை நீங்கள் பார்க்காதீர்கள். அதற்குப்பதிலாக மதத்தை இதில் புகுத்தாதீர்கள்” என்று கூறி தள்ளுபடி செய்தார்.
உச்சநீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பை திரையுலகை சேர்ந்தவர்கள் வரவேற்றுள்ளனர். குஷ்பு தனது டுவிட்டரில் இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்று தனுஷ் சிகரெட் பிடிக்கும் காட்சியுடைய போஸ்டர் குறித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கும் சென்னை நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.