சஹாரா குழுமத்தைச் சேர்ந்த 2 நிறுவனங்கள் முதலீட்டாளர்களிடம் பல ஆயிரம் கோடி பணத்தை முறைகேடாக வசூல் செய்தது குறித்த வழக்கில் சமீபத்தில் சஹாரா நிறுவனத் தலைவர் சுப்ரதா ராய் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கில் மேற்குவங்கத்தின் முக்கிய அமைச்சர்கள் பலர் சிக்கியுள்ள நிலையில், நாடு முழுவதும் இந்த வழக்கின் தீர்ப்பை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது.
இந்நிலையில் சஹாரா நிறுவனத்தலைவர் சுப்ரதா ராய் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார். இவரது ஜாமீன் மனுவை விசாரணை செய்த சுப்ரீம் கோர்ட் ரூ,5,000 கோடி ரொக்கம் மற்றும் ரூ.5,000 கோடிக்கு வங்கி உத்தரவாதம் என மொத்தம் ரூ.10,0000 கோடி நீதிமன்றத்தில் கட்டினால் மட்டுமே ஜாமீன் அளிக்கப்படும் என அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.
ஜாமீன் தொகையான ரூ.10,000 கோடியை திரட்ட நியூயார்க், லண்டன் நகரங்களில் உள்ள சஹாரா ஹோட்டல்களை அடமானம் வைத்து பணம் பெற சுப்ரீம் கோர்ட் அனுமதித்துள்ளது. போலீஸ் காவலில் இருந்தபடியே சொத்துக்களை விற்க பேச்சுவார்த்தை நடத்தலாம் என்றும் சுப்ரதா ராய்க்கு சுப்ரீம் கோர்ட் யோசனை தெரிவித்துள்ளது.
சஹாரா நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து ரூ.36,000 கோடி வசூல் செய்து பணத்தை திருப்பி கொடுக்காமல் முறைகேடு செய்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.