பல சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த சுரீந்தர் கோலி என்பவருக்கு வரும் 12 ஆம் தேதி தூக்கு நிறைவேற்றப்பட உள்ளது. இந்த தண்டனையை நிறைவேற்றுவதற்கான ஏற்பாடுகளை சிறை அதிகாரிகள் தற்போது செய்து வருகின்றனர்.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் கடந்த 2005 ஆம் ஆண்டு 11 வயது சிறுமி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு பின்னர் கொலை செய்யப்பட்டார். இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையின்போது, சுரீந்தர் கோலி என்பவர்தான் சிறுமியைக் கொன்றதும், இதேபோல் அவர் மேலும் 16 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, சுரீந்தர் கோலி மீது 16 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில், 5 வழக்குகளில் அவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள வழக்குகள் நிலுவையில் உள்ளது. கீழ் நீதிமன்றத்தின் தூக்குத் தண்டனையை உயர் நீதிமன்றமும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. கடந்த ஜூலை மாதம் சுரீந்தர் கோலி ஜனாதிபதிக்கு அனுப்பிய கருணை மனு நிராகரிக்கப்பட்டது.
இந்நிலையில், மரணத்தை எதிர்நோக்கியுள்ள 42 வயதேயான சுரீந்தர் கோலி, தற்போது காசியாபாத் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு வருகின்ற 12 ஆம் தேதி மீரட் சிறையில் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும் என சிறைக் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.