தற்போது நடைபெற்று வரும் உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தனது அபார பேட்டிங்கை நிரூபித்து வரும் சுரேஷ் ரெய்னா, தனது நீண்ட நாள் தோழியை வரும் ஏப்ரல் மாதம் திருமணம் செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.
மீரட் நகரைச் சேர்ந்த பிரியங்கா சௌத்ரி என்ற பெண்ணை சுரேஷ் ரெய்னா வரும் ஏப்ரல் மாதம் 3ம் தேதி கைப்பிடிக்கிறார் என்று அவரது நெருங்கிய உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
சுரேஷ் ரெய்னாவின் தாயாரும் ப்ரியங்கா செளத்ரியின் தாயாரும் நெருங்கிய தோழிகள் என்பதால் சிறுவயது முதலே ரெய்னாவும் ப்ரியங்காவும் நண்பர்களாக பழகி வந்துள்ளதாக கூறப்படுகிறது. பிரியங்கா சௌத்ரி நெதர்லாந்தில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
உலகக் கோப்பை போட்டி முடிந்து மார்ச் 30ம் தேதி இந்திய அணி தாயகம் திரும்புகிறது. அதன்பின்னர் ஏப்ரல் 3ம் தேதி காலை டில்லியில் ரெய்னா – பிரியங்கா நிச்சயதார்த்தமும், அன்று மாலை நட்சத்திர ஓட்டலில் திருமணமும் நடக்க ஏற்பாடுகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் மற்றும் இந்நாள் வீரர்கள் அனைவரும் இந்த திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.