கல்லடைப்பு, சதையடைப்பு போன்றவற்றை போக்கக் கூடிய நத்தைச் சூரி எனப்படும் மூலிகையின் மருத்துவ குணங்களை பற்றி இன்றைக்கு பார்ப்போம்: நத்தைச் சூரியும், நாயுருவியும் எத்தை சொன்னாலும் கேட்கும் என்ற பழமொழி உள்ளது. மதன கத்தி என்பது இதன் ஆயுர் வேத பெயர். நத்தை சுட்டி என்ற பெயரும் உள்ளது. இது வயல் வெளிகளிலும், ஏரி, குளம் போன்ற பகுதிகளிலும் சர்வ சாதாரணமாக காணக்கிடைக்கக் கூடிய ஒரு மூலிகையாகும்.
நோயுற்ற காலங்களில் மெலிந்த உடலை தேற்றுவதற்கான குணாம்சமும் நத்தை சூரிக்கு உண்டு. நத்தை சூரியைக் கொண்டு செய்யப்படும் தேநீரை பருகுவதன் மூலம் உடலை படிப்படியாக தேற்ற முடியும். நத்தை சூரியின் வேர்ப்பொடி, கல்கண்டு ஆகியவற்றை கொண்டு இதை தயாரிக்கலாம். ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீருடன், 2 கிராம் நத்தை சூரி வேர்ப்பொடி மற்றும் கல்கண்டை சேர்த்துக் கொள்ள வேண்டும். இதை கொதிக்க வைத்து வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை தொடர்ந்து பருகுவதன் மூலம் நோயால் பலவீனமடைந்த உடலை தேற்ற முடியும்.
நமது உடலின் உள்ளே இருந்து கோளாறுகளை ஏற்படுத்தக் கூடிய மனோ ரீதியான பிரச்னைகளை தீர்க்கக் கூடிய
வலிமையும் நத்தை சூரிக்கு உள்ளது என்றும் மருத்துவ நூல்கள் கூறுகின்றன. இதன் வேர்கள் எலும்புகளை பலப்படுத்தக் கூடியது. கால்சியம், பாஸ்பரஸ் போன்ற எலும்புக்கு வேண்டிய தாதுக்களை இது பெற்றுள்ளது. நத்தை சூரியின் இலைகளை கட்டிகளுக்கும், வீக்கங்களுக்கும் ஒரு பசையாக அரைத்து மேற்பூச்சாக பூசினால் நல்ல குணம் தெரியவரும்.
இலைகளை அரைத்து பூசுவதால் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்கும் தன்மை உடையது. நத்தை சூரி கல்லடைப்பு, சதையடைப்பு போன்ற பிரச்னைகளையும் போக்கக் கூடியதாக உள்ளது. நத்தை சூரி விதைப்பொடியை பயன்படுத்தி இதற்கான தேநீரை தயாரித்து பருகுவதன் மூலம் கல்லடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஒரு ஸ்பூன் நத்தைசூரி விதைப்பொடி, பனங்கற்கண்டு, சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இதை கொதிக்க வைத்து கஷாயமாக தயாரித்துக் கொள்ள வேண்டும். இந்த கஷாயத்தை பருகுவதன் மூலம் சிறுநீரகங்களில் ஏற்படும் கல்லடைப்பு, சதையடைப்பு போன்ற பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். ஈரலை வளப்படுத்தக் கூடியது. ஈரல் நோய்களை குணப்படுத்தக் கூடியது. சோர்வான உடலை தேற்றி புத்துணர்வை அளிக்கிறது. ரத்தம் கலந்த பேதியை தடுக்கும். எலும்புக்கு பலம் அளிக்கக் கூடியதாகவும் நத்தை சூரி பயன் அளிக்கிறது.