நான் அப்படி செய்தது தவறுதான். வருத்தம் தெரிவித்த சூர்யா
சூர்யாவின் திரைப்படங்களில் அவருக்கு பெருமளவு திருப்பத்தை உண்டாக்கிய படம் என்றால் அது ‘காக்க காக்க’ மற்றும் ‘வாரணம் ஆயிரம்’. இந்த இரண்டு படங்களை அடுத்து அவர் மீண்டும் கவுதம் மேனனுடன் இணைய முயற்சித்தபோது திடீரென இருவருக்கும் கருத்துவேறுபாடு ஏற்பட்டு ‘துருவ நட்சத்திரம்’ என்ற அந்த படம் டிராப் ஆனது.
இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பின்னர் அந்த படம் டிராப் ஆனதற்கு தானே காரணம் என்றும் தான் உருவாக்கிய சேதத்தை தற்போது சரிசெய்து வருவதாகவும் சூர்யா சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அந்த பேட்டியில் அவர் கூறியது இதுதான்: எனது திரையுலகில் ‘காக்க காக்க’ பெரும் மாற்றத்தை உண்டாக்கியது. அதற்குப் பிறகு ‘வாரணம் ஆயிரம்’ பற்றி இன்று வரையும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மறுபடியும் அவ்வளவு சீக்கிரமாக அப்படியொரு படம் செய்ய முடியுமா எனத் தெரியவில்லை.
எங்கள் இருவருக்குள்ளும் நிறைய தனிப்பட்ட மறக்க முடியாத விஷயங்கள் இருந்துள்ளது. ஒரு கட்டத்தில் நம்மை இவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், இவர்களுக்காக ஒரு படம் செய்ய வேண்டும் என்று தோன்றும். என் படத்தில் இந்த விஷயங்கள் கூடாது என்றால், எனக்கு அது பொறுப்பு மாதிரி மாறுகிறது. சில சமயங்களில் இந்த மாதிரி விஷயங்கள் எல்லாம் நாம் செய்யக் கூடாது என்று என்னைச் சுருக்கிக் கொள்ள வேண்டிய தருணமும் வருகிறது.
அப்படி ஒரு விஷயம் தான் எங்களுக்குள் நடந்தது. அச்சமயத்தில் என்னுடைய கருத்துகளும் வலுவாக இருந்தன. அவருடைய கருத்துகளும் வலுவாக இருந்தன. இதில் நடிகர் – இயக்குநர் என இருவரும் பேச வேண்டுமா, இல்லையென்றால் நண்பர்களாக பேச வேண்டுமா எனப் பார்க்கும்போது, இச்சமயத்தில் படம் செய்தால் சரியாக வராது எனத் தோன்றியது.
என் மீது தப்பு இருக்கிறது என நான் இப்போது சொல்லிக் கொள்கிறேன். அச்சமயத்தில் எனது கருத்துகளில் வலுவாக இருந்து, படம் செய்ய வேண்டாம் என நினைத்தேன். இதை தொழில்ரீதியாக மட்டுமே பார்க்க வேண்டும். அந்த முடிவை எடுப்பதற்கு மிகவும் கடினமாக இருந்தது. நிறைய பேருக்கு தெளிவுபடுத்த வேண்டுமே என்று எனக்கு பிடிக்காமல் அறிக்கை ஒன்று வெளியிட்டேன்.
பத்திரிகைகளில் வந்தவுடனே, நாம் இந்த முடிவை எடுத்திருக்க வேண்டாமே என்று எண்ணினேன். அன்று மாலையே இப்படி நாம் செய்திருக்கக் கூடாது எனத் தோன்றியது. ஆனால் நேரம் தாண்டிவிட்டது.
என் மனதளவில் இருவரும் படம் செய்ய வேண்டும், எப்படி செய்யலாம் என்று எண்ணம் இருந்துகொண்டே இருந்தது. நீண்ட நாட்கள் நிலுவையில் இருந்த சந்திப்பு ஹாரிஸ் ஜெயராஜ் சார் மூலமாக நடைபெற்றது. இருவரும் பேசி படம் பண்ண தீர்மானித்திருக்கிறோம். இதற்கு முன்பு இருந்தவர்களுக்கு நாம் ஒரு உதாரணமாக இருக்கக் கூடாது, உடைக்க வேண்டும் என்று முடிவு செய்து இப்போது வரை பேசிக் கொண்டிருக்கிறோம்.
பழைய விஷயங்கள் எதையுமே நான் மறக்கவில்லை. கண்டிப்பாக ஒரு சேதத்தை நான் உண்டாக்கினேன். அதனை நான் தானே சரி செய்ய வேண்டும், செய்து கொண்டிருக்கிறேன்.”
இவ்வாறு சூர்யா தெரிவித்தார்.