ஆஞ்சநேயருக்கு வடைமாலை சாத்தப்படுவதற்கு ஒரு புராணகதை சொல்லப்படுவது உண்டு.ஒரு சமயம் சூரிய உதயத்தின்போது சிகபாக இருக்கும் சூரியன் ஒரு பழமாக சின்ன குழந்தையான அனுமனுக்கு தெரிந்ததால்,அதை சாப்பிடுவதற்கு உகந்த ஒரு பழம் என்று நினைத்து வாயு வேகத்தில் வானத்தில் பறந்தார். பிறந்து சில நாட்களே ஆன ஒரு பச்சிளங்குழந்தை, சூரியனையே விழுங்குவதற்காக இப்படிப் பறந்து செல்வது கண்டு தேவர்கள் திகைத்தனர். வாயுபுத்திரனின் வேகத்தை எவராலும் தடுக்கமுடியவில்லை.
அதே நேரத்தில் ராகு கிரஹமும் சூரியனைப் பிடித்து கிரஹண காலத்தை உண்டுபண்ணுவதற்காக நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால், அனுமன் சென்ற வேகத்தில் ராகு பகவானால் செல்ல முடியவில்லை. சூரியனைப் பிடிப்பதற்காக நடந்த இந்த ரேசில் அனுமனிடம் ராகு பகவான் தோற்றுப் போனார்.
இந்த நிகழ்ச்சியின் முடிவாக, அனுமனுக்கு ஒரு அங்கீகாரம் கொடுத்தார் ராகு பகவான். அதாவது, தனக்கு மிகவும் உகந்த தானியமான உளுந்தால் உணவுப் பண்டம் தயாரித்து எவர் ஒருவர் அனுமனை வணங்குகிறாரோ , அவரை எந்தக் காலத்திலும் தான் பீடிப்பதில்லை எனவும், தன்னால் வரும் தோஷங்கள் அனைத்தும் நிவர்த்தி ஆகி விடும் எனவும் ராகு பகவான் அனுமனிடம் தெரிவித்தார்.
இந்த உணவுப் பண்டம் எப்படி இருக்க வேண்டும் என்றும் ராகு பகவான் அனுமனிடம் சொன்னார். அதாவது தன் உடல் போல் (பாம்பு போல்) வளைந்து இருக்க வேண்டும் எனவும் சொன்னார். அதைதான் உளுந்தினால் ஆன மாலைகளாகத் தயாரித்து அனுமனுக்கு சமர்ப்பிக்கிறோம்.