சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோயில் ராஜகோபுரத்தின் முதல் நிலையில் உள்ள அனைத்து பழங்கால சிற்பங்களும் சீரமைக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி தருகின்றன. மீதமுள்ள ஆறு நிலைகளிலும் இப்பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் புகழ் பெற்ற பழமையான கோயில்களில் உள்ள ராஜகோபுரம் மற்றும் கோபுரங்களின் உள் பகுதியில் வரையப்பட்டிருக்கும் மூலிகை ஓவியங்களை சீரமைக்க தமிழக அரசு பழமையான 50 கோவில்களை தேர்வு செய்தது. இந்த வகையில் குமரி மாவட்டத்தில் சுசீந்திரம் தாணுமாைலய சாமி கோயிலும், திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோயிலும் தேர்வாயின. சுசீந்திரத்தில் ஏழு அடுக்குகளை கொண்ட 133 அடி உயர ராஜகோபுரத்தை சீரமைக்க தொல்லியல் துறையை சேர்ந்த ஓய்வு பெற்ற ஆராய்ச்சியாளர் வீரராகவன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்த குழு அளித்த அறிக்கையின் படி மூலிகை ஓவியங்களை புதுப்பிக்க ரூ.81 லட்சம், கோபுரத்தில் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிற்பங்கள் மற்றும் சுதைகள், ஈரக்கசிவுகளை சரிசெய்யும் வகையில் ரூ.33 லட்சம் என ஒருகோடியே 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தது.
இதில் முதற்கட்டமாக ராஜகோபுரத்தின் வெளிப்பிரகாரத்தில் உள்ள சிற்பங்கள், சுதைகள் மற்றும் ஈரக்கசிவுகள் ஆகியவற்றை புனரமைக்கும் பணி நிறைவு பெற்று வெளிப்பிரகாரம் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. கோபுரத்தின் உள்பகுதியில் ஏழு அடுக்குகளிலும் காணப்படும் ராமாயணம் மற்றும் மகாபாரத கதைகளை விளக்கும் 180 மூலிகை ஓவியங்களை புதுப்பிப்பதற்கான பணிகள் கடந்த மாதம் தொடங்கியது. தற்போது முதல் நிலையில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கப்பட்டு, பழமை மாறாமல் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதை தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர் வீரராகவன் பார்வையிட்டார். இதர நிலைகளில் மூலிகை ஓவியங்கள் புதுப்பிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது