இந்தியா, பாகிஸ்தான் இடையிலான பேச்சுவார்த்தையை, பாகிஸ்தான் நாடுதான் சீர்குலைத்துவிட்டது. அந்த நாடு பிரிவினைவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதால்தான் பேச்சுவார்த்தையை நிறுத்தும் சூழ்நிலைக்கு இந்தியா தள்ளபட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் குற்றஞ்சாட்டி உள்ளார்.
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியில் இரு நாடுகளுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி அடிக்கடி பாகிஸ்தான் ராணுவம் இந்திய நிலைகளை நோக்கி தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், 10 நாட்கள் பயணமாக அமெரிக்காவுக்கு சென்றுள்ள இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், நியூயார்க்கில் நேற்று செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது, ”இந்தியா, பாகிஸ்தான் இடையே பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உகந்த சூழ்நிலையை நரேந்திர மோடி தலைமையிலான அரசு ஏற்படுத்தியது. ஆனால், பாகிஸ்தான் நாடுதான் அந்த பேச்சுவார்த்தையை சீர்குலைத்துவிட்டது.
மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்ற பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப், வெளியுறவுத் துறை அதிகாரிகள் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தினார். இந்தியா அதற்கு உடனடியாக ஒப்புக் கொண்டது. ஆனால், அந்நாட்டின் தூதர், ஹூரியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதன் மூலம் அந்த நல்ல சூழல் சீர்குலைக்கப்பட்டு விட்டது” என்றார்.