ஆப்கானிஸ்தான் அதிபர் ஹமீது கர்சாயை இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் நேற்று ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் சந்தித்துப் பேசினார். இந்தப் பேச்சுவார்த்தையின்போது, இந்தியா, ஆப்கானிஸ்தான் இடையேயான பாதுகாப்பு, பொருளாதார பகிர்வு, ராணுவ ஒத்துழைப்பை அதிகரிப்பது ஆகியவை குறித்து முடிவு செய்யப்பட்டது.
அரசு முறை பயணமாக ஆப்கானிஸ்தானுக்கு நேற்று சென்ற இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், அந்நாட்டு தலைநகர் காபூலில் நேற்று மாலை அதிபர் ஹமீது கர்சாயை நேரில் சந்தித்து பேசினார்.
இந்த பேச்சுவார்த்தையில் ஆப்கானிஸ்தான் தற்போதைய நிலையில் எதிர்கொண்டு வரும் பல்வேறு தீவிரவாதிகளின் சவால்களுக்கு முடிவு காண்பதற்கான அனைத்து உதவிகளையும் இந்தியா வழங்கும் என்று அவர் ஆப்கன் அதிபரிடம் தெரிவித்தார். மேலும் ஆப்கானிஸ்தானின் மறுகட்டுமான பணியில் இந்தியா தொடர்ந்து ஈடுபடும் என்றும் சுஷ்மா தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தையில், வர்த்தக துறையில் இருநாடுகளிடையே ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்த அவசியத்தை இருநாடுகளும் தீவிர முயற்சி செய்யவேண்டும் என்பதை கர்சாயும், சுஷ்மா ஸ்வராஜும் ஒப்புக் கொண்டனர்