ராகுல்காந்தி கழுதை என்று விமர்சித்த காங்கிரஸ் பிரமுகர்,
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல் காந்தியை அவரது கட்சியை சார்ந்த ஒருவரே ‘ராகுல்காந்தி ஒரு கழுதை’ என்று அழைத்துள்ளதால் கட்சி வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கட்சி விரோத நடவடிக்கைகளுக்காக இடைநீக்கம் செய்யப்பட்டவர் சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ராய் என்பவர். இவர் சட்டீஸ்கர் ஜனதா காங்கிரஸ் கட்சி தலைவர் அஜித் ஜோகிக்கு ஆதரவாக செயல்பட்டதாக கூறப்பட்ட நிலையில் இவர் மீதான குற்றச்சாட்டுக்காக இவரை கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்வதாக சட்டீஸ்கர் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஹரி பிரசாத் அறிவித்துள்ளார்.
தனது சஸ்பெண்ட் குறித்து கருத்து தெரிவித்த ஆர்.கே.ராய், ராகுல் காந்தியை முன்பு ஒருமுறை விமர்சனம் செய்ததற்காகவே தன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக கழுதையை, குதிரை என்று கூற முடியாது என்றும், அப்படி அவர்கள் நினைத்தால் காங்கிரஸ் கட்சிக்கு பார்வை தெரியவில்லை இல்லையெனில் பார்வை தெரியாதது போல் அந்த கட்சி நடிக்கிறது என்றும் தெரிவித்துள்ளார்.