சுவாமி தயானந்த சரஸ்வதி மகாசமாதி ஆனார். பிரதமர் மோடி, ரஜினி இரங்கல்

சுவாமி தயானந்த சரஸ்வதி மகாசமாதி ஆனார். பிரதமர் மோடி, ரஜினி இரங்கல்
dayananda
பாரத பிரதமர் நரேந்திர மோடியின் ஆன்மீக குருவும், ஆன்மீகவாதியுமான சுவாமி தயானந்த சரஸ்வதி நேற்று இரவு காலமானார். அவருக்கு வயது 85. தயானந்த சரஸ்வதியின் மறைவுக்கு பிரதமர் மோடி, நடிகர் ரஜினிகாந்த் உள்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். மரணம் அடைந்த சுவாமி தயானந்த சரஸ்வதியின் இறுதிச் சடங்குகள் ரிஷிகேஷில் நாளை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற வேதாந்த ஞானியும், கோவை, ஆனைகட்டியில் உள்ள ஆர்ஷ வித்யா குருகுலத்தின் நிறுவனருமான சுவாமி தயானந்த சரஸ்வதி நேற்றிரவு 10.20 மணியளவில் உத்தரகண்ட் மாநிலம், ரிஷிகேஷில் உள்ள அவரது ஆசிரமத்தில் காலமானார்.

கடந்த சில மாதங்களாக நுரையீரல் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வந்த சுவாமி தயானந்த சரஸ்வதி தற்போது மரணம் அடைந்துள்ளார். சமீபத்தில் பிரதமர் மோடி ரிஷிகேஷ் சென்றபோது தயானந்த சரஸ்வதி சுவாமியை சந்தித்து நலம் விசாரித்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது..

1930 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் தேதி திருவாரூர் மாவட்டம், மஞ்சக்குடியில் பிறந்த சுவாமி தயானந்த சரஸ்வதி, 1962 ஆம் ஆண்டு சுவாமி சின்மயானந்தரிடம் சன்னியாசம் பெற்றார். பின்னர் 1990ஆம் ஆண்டு கோவை மாவட்டம் ஆனைகட்டி பகுதியில் ஆர்ஷ வித்யா குருகுலத்தை நிறுவினார். இதேபோல், ரிஷிகேஷ், நாகபுரி மற்றும் அமெரிக்காவிலும் ஆசிரமங்களை நிறுவி வேதாந்தத்தைக் கற்றுக் கொடுத்தார். இங்கு பயின்ற 200-க்கும் மேற்பட்ட சன்னியாசிகளும், மாணவர்களும் உலகின் பல்வேறு நாடுகளில் வேதாந்தத்தைப் போதித்து வருகின்றனர்.

ஏழை எளிய மாணவ, மாணவிகளுக்காக நாடு முழுவதும் 120 இடங்களில் “எய்ம் பார் சேவா’ என்ற பெயரில் இலவச விடுதிகளை இவர் தொடங்கியுள்ளாஅர். ஆன்மிகம், கலை, கலாசாரம், சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்ட சுவாமி தயானந்த சரஸ்வதி, உலகின் பல்வேறு நாடுகளிலும் ஆன்மிகச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி, விழிப்புணர்வு ஏற்படுத்தியவர். இவரின் ஆன்மிகச் சொற்பொழிவுகள் தமிழ், ஆங்கிலம், ஹிந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் புத்தகங்களாக வெளியிடப்பட்டுள்ளன.

Leave a Reply