சுவாமிமலை கோவில் கும்பாபிஷேகம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!

swamimalai-murugarதஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகேயுள்ள, ஆறுபடைகளில் ஒன்றான சுவாமிமலை முருகன் கோவில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடந்தது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுள், 4வது படைவீடு சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோவிலாகும். கடந்த, 2000ம் ஆண்டு இங்கு கும்பாபிஷேகம் நடந்தது. கடந்த, 2012 அக்டோபர், 29ம் தேதி விமான பாலாலயம் செய்யப்பட்டது. இரண்டு கோடி ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் முடிவுற்றது.

இதையடுத்து நேற்று காலை, 5 மணி முதல், 6.30 மணிக்குள் கும்பாபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு, கடந்த, 3ம்தேதி அதிகாலை விக்னேஸ்வர பூஜை, கணபதி பூஜை ஆகியவை நடந்தது. காவிரி ஆற்றிலிருந்து புனிதநீர் எடுத்து வந்து, யாகசாலை பூஜை தொடங்கியது. நேற்று, இரண்டாம், மூன்றாம் கால யாகசாலை பூஜை நடந்தது. அறநிலையத்துறை அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டார். பின்னர், உபயதாரர் வழங்கிய, எட்டு லட்சம் ரூபாய் மதிப்பிலான வெள்ளி பல்லக்கில், புனிதநீர் அடங்கிய கலசங்கள் வைக்கப்பட்டு கோவிலுக்கு கொண்டு வரப்பட்டது. மயிலாடுதுறை எம்.பி., பாரதிமோகன், தஞ்சை எம்.எல்.ஏ., ரங்கசாமி, ஆகியோர் கலந்து கொண்டனர். நேற்று, ஆறு கால யாக பூஜைகள் நடந்தது. இதையடுத்து, யாகசாலை மண்டபத்திலிருந்து புனித கலசங்கள் புறப்பட்டு காலை 6.30 மணிக்கு அனைத்து விமான கும்பாபிஷேகம், 6.45 மணிக்கு மூலவர் சுவாமிநாதசுவாமி மற்றும் பரிவாரமூர்த்திகளுக்கு இசை வாத்தியங்கள் முழுங்க, கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்ட கும்பாபிஷேகம் நடந்தது. யாகசாலை மற்றும் கும்பாபிஷேகத்தை, சர்வசாதகம் நாகராஜகுருக்கள் தலைமையில், கோவில் அர்ச்சகர்கள் செய்தனர். விழாவில், சென்னை இந்துசமய அறநிலைத்துறை இயக்குனர் வீரசண்முகமணி கலந்து கொண்டார்.

* கும்பகோணத்தில், மகாமககுளத்திற்கு தென்மேற்கு பகுதியில், கௌதமேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகமும் நடந்தது. ஏற்பாடுகளை செயல் அலுவலர் அசோக்குமார், தக்கார் கவியரசு மற்றும் கும்பாபிஷேக உபயதாரர் சௌந்தரநாயகி சபா தலைவர் ராயாகோவிந்தராஜன் ஆகியோர் செய்தனர்.

Leave a Reply