அரவிந்த் சுப்பிரமணியனுக்கு எதிரான கருத்தை வாபஸ் பெற்றார் சுப்பிரமணியன் சுவாமி
சமீபத்தில் இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம் ராஜனுக்கு எதிராக பரபரப்பான கருத்துக்களை தெரிவித்து அவர் மீண்டும் பதவியேற்க முடியாத சூழ்நிலையை உண்டாக்கிய சுப்பிரமணியன் சுவாமி அடுத்ததாகஇந்திய தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியத்துக்கு எதிராகவும் அதிரடியாக சில புகார்களை தனது டுவிட்டரில் தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு அரவிந்த் சுப்பிரமணியம் மீது தங்களுக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்பதை அழுத்தமாக பதிவு செய்ததால் வேறு வழியின்றி தனது கருத்தை வாபஸ் பெற்றுள்ளார் சுப்ரமணியன் சுவாமி.
முன்னதாக சுப்பிரமணியன் சுவாமி தனது டுவிட்டரில் ”இந்தியாவின் அறிவுசார் சொத்துக்கள் குறித்த ஆராய்ச்சியை எதிர்த்தவர் மோடியின் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன். இந்தியாவிற்கு எதிராகவும், அமெரிக்காவிற்கு ஆதரவாகவும் கருத்து கூறி வந்தவர். இது பற்றிய சமீபத்தில் ஆங்கில பத்திரிக்கை ஒன்றில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இவரை பதவியில் இருந்து நீக்க வேண்டும்” என கூறி இருந்தார்.
ஆனால் உடனடியாக செய்தியாளர்களை சந்தித்த அருண் ஜெட்லி ”தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் மீது அரசுக்கு முழு நம்பிக்கை உள்ளது. அரவிந்த் சுப்ரமணியன் குறித்த சுப்ரமணியன் சுவாமி கூறியது அவரது சொந்த கருத்து. அரசியல்வாதிகள் அரசுக்கு எதிராக தாக்குதல் நடத்துவது ஏற்றுகொள்ள முடியாது” என்று கூறினார்.
இந்நிலையில், சுப்ரமணியன் சுவாமி தனது கருத்தில் இருந்து பின்வாங்கி உள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ”இந்திய நிறுவனத்திற்கு எதிராக செயல்பட்டவருக்கு அரசு ஆதரவு தெரிவிக்கிறது. மத்தியில் உள்ள பா.ஜ.க., அரசு அரவிந்த் சுப்ரமணியத்தை பற்றி தெரியும் என்கிறது, ஆனாலும் அவர் அரசுப்பதவியில் உள்ளார். இதனால் நான் எனது கருத்தை வாபஸ் பெற்றுக்கொள்கிறேன். ஆனால் உண்மை விரைவில் தெரியவரும். அதுவரை நான் காத்திருப்பேன்” என தெரிவித்து உள்ளார்.