என் மீது தவறு இருந்தால் என்னை சிறையில் அடையுங்கள். ராகுல்காந்தி ஆவேசம்
காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவர் ராகுல்காந்தி ஒரு பிரிட்டன் பிரஜை என்றும், அவரது எம்.பி பதவியை ரத்து செய்ய வேண்டும் என்றும் சமீபத்தில் பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார். இந்நிலையில் இன்று இதற்கு பதிலளித்த ராகுல்காந்தி பிரிட்டன் பிரஜை விவகாரத்தில் நான் தவறு செய்திருந்தால், என்னை சிறையில் தள்ளுங்கள் என்று பிரதமர் மோடிக்கும் சவால் விடுத்துள்ளார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று நடந்த மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 98-வது பிறந்த தின நிகழ்ச்சியில் ஆவேசமாக பேசிய ராகுல்காந்தி கூறியதாவது: “பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் ஆகியவை எனது பாட்டி, என் தந்தை, என் தாயார் ஆகியோர் மீது சேற்றை வாரி இரைத்து வருவதை நான் எனது குழந்தைப் பருவத்திலிருந்தே கவனித்து வந்துள்ளேன்.
நான் ஒன்றை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன். என் மீது பல்வேறு விதமான குற்றச்சாட்டுகள் எழுப்பப் படுகின்றன, ஆனால் அதிலெல்லாம் இம்மியளவு கூட உண்மை இல்லை. மோடிஜீ இது உங்கள் அரசு. உங்கள் வசமே அரசு எந்திரங்கள் உள்ளன.
எனக்கு எதிராக விசாரணை நடத்துங்கள், அதில் நீங்கள் என் மீது தவறு கண்டுபிடித்தால் என்னை சிறையில் தள்ளுங்கள். என் மீதும் என் குடும்பத்தினர் மீதும் சேற்றை வாரி இரைப்பதை நிறுத்துங்கள். நீங்கள் இப்போது எதிர்க்கட்சி அல்ல, ஆளும் கட்சி.
எனக்கு துளிக்கூட பயமில்லை. நான் பின் வாங்கமாட்டேன் (மோடி மீதான எதிர்ப்பிலிருந்து), தொடர்ந்து விவசாயிகளுக்காகவும், ஏழைகளுக்காகவும் போராடுவேன்.
ராகுல்காந்தியின் இந்த பதிலடிக்கு பாஜக என்ன பதில் சொல்ல போகின்றனர் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.