சுவாதி கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது.

சுவாதி கொலை வழக்கில் அடையாள அணிவகுப்பு தொடங்கியது.

puzhalஇன்ஃபோசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில் சென்னை புழல் சிறையில் கொலையாளியை அடையாளம் காணும் அணிவகுப்பு சற்று முன்னர் நீதிபதி சங்கர் முன்னிலையில் தொடங்கியுள்ளது. கொலையாளியை அடையாளம் காட்ட சுவாதியின் தந்தை சந்தானகோபாலகிருஷ்ணன் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

சென்னை சூளைமேடு பகுதியை சேர்ந்த பொறியாளர் சுவாதி கடந்த மாதம் 24ஆம் தேதி நுங்கம்பாக்கம் ரயில்நிலையத்தில் கொடூரமாக அரிவாளால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநெல்வேலி மாவட்டம் செங்கோட்டையை அடுத்துள்ள மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமார் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். தற்போது ராம்குமார் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

சுவாதி கொலை செய்யப்பட்ட போது கொலைச்சம்பவத்தை நேரில் பார்த்ததாக கூறப்படும் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் உள்ள கேண்டீனில் வேலை பார்க்கும் ஊழியர், தமிழ்ச்செல்வன் என்ற ஆசிரியர் மற்றும் சிலர் கொலையாளியை அடையாளம் காட்டும் விதமாக ராம்குமார் மற்றும் பிற நபர்களை வரிசையாக நிற்கவைத்து அடையாள அணி வகுப்பு நடத்த போலீசார் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் முடிவு செய்தனர்.

இந்த அடையாள அணிவகுப்பை நடத்த ஒரு நீதிபதியை நியமனம் செய்யும்படி சென்னை எழும்பூர் தலைமை மாஜிஸ்திரேட்டிடம், நுங்கம்பாக்கம் போலீசார் மனு கொடுத்தனர். இந்த மனுவை விசாரணை செய்த தலைமை மாஜிஸ்திரேட் இந்த அடையாள அணிவகுப்பை நடத்த, சென்னையில் உள்ள மூத்த சிவில் நீதிபதியும், சைதாப்பேட்டை 9-வது குற்றவியல் நீதிமன்ற நீதிபதியுமான ஆர்.சங்கர் அவர்களை நியமனம் செய்து உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை தொடர்ந்து இன்று காலை சென்னை புழல் சிறையில் அடையாள அணிவகுப்பு தொடங்கியுள்ளது.

Leave a Reply