சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம். கொலையா? தற்கொலையா?

சுவாதி கொலை வழக்கில் கைதான ராம்குமார் சிறையில் மரணம். கொலையா? தற்கொலையா?

ramkumarநுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியை கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு கைது செய்து சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் நேற்று சிறையில் மர்மமான முறையில் மரணம் அடைந்தார். தனது மகனை சிறை அதிகாரிகளே கொலை செய்துவிட்டதாக ராம்குமாரின் தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

புழல் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ராம்குமார் சிறை எண்2-ல் அடைக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று மின்சாரம் பாய்ந்து கொண்டிருந்த கம்பியை கடித்து தற்கொலை செய்து கொண்டதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

காலை சிற்றுண்டி சாப்பிட்ட ராம்குமார் மதிய உணவுக்கு சில நிமிடங்களுக்கு பின்னர் சிறையில் இருந்து மின்கம்பியை வாயால் கடித்ததாகவும் இதன்காரணமாக மின்சாரம் தாக்கி மரணம் அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

ராம்குமார் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியானதும் அவரது சொந்த ஊரான மீனாட்சிபுரம் கிராமமே சோகத்தில் மூழ்கியது.

ராம்குமார் மரணம் குறித்து அவரது தந்தை கூறியபோது, ‘‘என் மகனுக்கும் இந்த கொலைக்கு எந்த தொடர்பும் இல்லை. சிறையில் அவனை சந்தித்த ஒவ்வொரு நாளும் என்னிடம், ‘அப்பா… நான் இந்த கொலையை செய்யலை. ஆனால், ஏதோ சதியால் என்னை சிக்க வைச்சிருக்காங்க. விசாரணையில் உண்மை தெரியவரும். அதுவரைக்கும் கொஞ்சம் அமைதியாக இருங்க. உண்மை சீக்கிரம் வெளியே தெரிய வரும்’னு சொல்லிக்கிட்டே இருந்தான்.

நானும் அவன் சொன்னதை நம்பியே இருந்தேன். என்னோட குடும்பமே இந்த வழக்கு விசாரணையை எதிர்பார்த்து இருந்துச்சு. அவன் விடுதலையாகி வருவான்னு நம்பி இருந்தோம். அவனுக்கும் சுவாதி கொலைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பது எனக்கும் எனது குடும்பத்துக்கும் நிச்சயமாக தெரியும். ஆனால், அவனை இந்த வழக்கில் சிக்க வைக்க அரசுத் தரப்பில் தொடர்ந்து முயற்சி செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. எங்க வழக்கறிஞர் ராம்ராஜ் இதில் இருந்து விலகிட்டதாக பொய்யான வதந்தியை கிளப்பி, அவருக்கும் எங்களுக்கும் இடையே கருத்து வேறுபாட்டை ஏற்படுத்த முயற்சி செஞ்சாங்க.

அப்போது கூட இந்தளவுக்கு நடக்கும் என நான் நினைக்கவில்லை. ஆனால், இப்போது என் மகனை அரசும் காவல்துறையும் சேர்ந்து கொலை செஞ்சு இருக்காங்க. இந்த சம்பவத்தின் பின்னணியில் யார் இருக்காங்க என்பது எனக்கு தெரியாது. என் மகன் தற்கொலை செய்யும் அளவுக்கு கோழை அல்ல. அவனைக் கடைசியாக சந்தித்தபோது கூட, ‘அப்பா நீங்க தைரியமா இருங்க. நான் நிரபராதியா வெளியே வருவேன். கவலைப்படாதீங்க. அம்மாவிடமும் தங்கச்சிகளிடமும் இதை சொல்லுங்க’னு சொன்னான்.

அதற்குள் இப்படி ஒரு தகவலை போலீஸார் எனக்கு தெரிவிச்சு இருக்காங்க. இதில் சதி இருக்கிறது. இதை கண்டுபிடிக்க வேண்டியது அரசின் கடமை. ஆனால், அரசே இப்படி ஒரு செயலை செஞ்சிருக்குமோன்னு சந்தேகமா இருக்கு. என் மகனின் மரணத்தில் நடந்த உண்மையை அரசு வெளிப்படுத்தியே தீர வேண்டும். அதுவரை நான் ஓயமாட்டேன்’’ என்றார் ஆவேசமாக

Leave a Reply