காட்டுத்தீ போல் பரவி வரும் பன்றி காய்ச்சல் முன்னெச்சரிக்கை வழிமுறைகள்!

swinefluprecautionsandpreventions

2009 ஆம் ஆண்டு முதன் முதலாய் விஸ்வரூபம் எடுத்த பன்றி காய்ச்சல் என கூறப்படும் ஸ்வைன் ஃப்லூ. இப்போது மறுபடியும் இந்த ஆண்டு இந்தியா முழுவதும் மிக வேகமாய் பரவிக் கொண்டிருக்கிறது. இன்று வரையிலும் மட்டும் 6௦௦-க்கும் மேற்பட்டவர்கள் நமது நாட்டில் பன்றி காய்ச்சலால் உயிர் இழந்துள்ளனர். பன்றி காய்ச்சலில் பல வகை வைரஸ்கள் இருக்கின்றன. அதில், இந்தியாவில் பரவலாக பரவும் வைரஸ் H1N1 டைப் ஏ என கூறப்படுகிறது. இது காற்றில் பரவும் வைரஸ் எனப்படுகிறது. நாம் காற்றை சுவாசிக்கும் போது நம் உடலில் இது பரவுகிறது. இது ஒரு தொற்று கிருமி ஆகும். இதன் மூலம், காய்ச்சல், தலை வலி, வயிற்று போக்கு, இருமல், தும்மல், கை கால் எலும்புகளில் வலி போன்றவை ஏற்படுகின்றன.

பன்றிக் காயச்சலில் இருந்து பாதுகாப்பாக இருக்க, அடிப்படைப் பாதுகாப்புகளை சரியாக பின்பற்றினாலே போதும். தண்ணீரை காய்ச்சி குடிப்பது, உணவு உட்கொள்ளும் முன்பு கைகளை நன்கு கழுவிவிட்டு சாப்பிட வேண்டும் மற்றும் முகத்திற்கு சுவாச பாதுகாப்பு கவசம் அணிந்துக் கொள்வது மிக மிக அவசியம் என மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர். மற்றும் உங்களுக்கு பன்றி காய்ச்சல் இருக்கிறது போன்ற அறிகுறிகள் தோன்றும் போதே மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள் மற்றும் அவர்கள் பரிந்துரைக்கும் மருந்துகளை நேரம் தவறாது உட்கொள்ளுங்கள். இனி, பன்றி காய்ச்சல் வராமல் இருக்க எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும். வந்தால் எவ்வாறு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதைப் பற்றி விரிவாக தெரிந்துக் கொள்ளலாம்…

பன்றி காய்ச்சல் வர காரணம்

பன்றி காய்ச்சல் சுவாசிக்கும் போது காற்றின் வழியாக நமக்கு ஏற்படும் ஒரு நோயாகும். இந்த வைரஸை ஸ்வைன் ஃப்ளூ என குறிப்பிடுகின்றனர். இதில் பல வகைகள் இருக்கின்றன, H1N1, H1N2, H1N3, H3N1, H3N2 மற்றும் H2N3. இதில் முக்கியமாக தொற்றுவது H1N1 வகை தான். இந்த வைரஸ் முதலில் பன்றிகளில் இருந்ததாக கூறப்படுகிறது. இது மனிதர் மற்றும் பன்றிக்கு இடையிலான நேரடி தொடர்பு மூலமாக தொற்றுவது இல்லை. எனினும், இந்த புது மரபு பிறழ்ச்சியினால் தோன்றியிருக்கலாம் என மருத்துவர்கள் கருதிகின்றனர். இந்த வைரஸ், முன்னரே பாதிக்கப்பட்ட ஒரு நபரிடம் இருந்து தான் காற்று வழியாக பரவுகிறது என மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.

அபாயங்கள்

இது காற்றின் மூலமாக பரவுவதால், நீங்கள் அடிப்படை பாதுகாப்புகளை பின் தொடருவது அவசியம் ஆகும். இந்த வைரஸ் காய்ச்சல், நிமோனியா உள்ளவர்கள், மற்றும் கர்ப்பணி பெண்கள், இதய நோய் இருப்பவர்கள் மற்றும் நீரிழிவு நோய் உள்ளவர்களை மிக எளிதாக தாக்குகிறது. முக்கியமாக குழந்தைகளும், வயது முதிர்ந்தவர்களும் மிக பாதுகாப்பாக இருக்க வேண்டும். 

அறிகுறிகள்

பன்றி காய்ச்சலின் அறிகுறிகள் என கூறப்படுவது, காய்ச்சல், தலைவலி, வயிற்று போக்கு, கை கால் மூட்டு வலி, இருமல், தும்மல், தொண்டை கரகரப்பு, மயக்கம் போன்றவை ஆகும்.

எப்படி கண்டறிவது

பன்றி காய்ச்சல் வைரஸ் தொற்று உள்ளதா என கண்டறிய ஆய்வுக்கூடத்தில் பரிசோதனை செய்யும் முறை தான் கையாள வேண்டும். இதை முழுமையாக கண்டறிய நான்கில் இருந்து ஐந்து நாட்கள் ஆகும். உடனடியாக கண்டறிய, பாலிமரஸ் தொடர் எதிர்வினை பரிசோதனை (PCR Test) செய்து பார்க்க வேண்டும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 

சிகிச்சை

ஒரு நபருக்கு பன்றி காய்ச்சல் வைரஸின் தாக்கம் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுவிட்டால், உடனடியாக அவருக்கு சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். ஏனெனில், ஆரம்பக் கட்டத்திலேயே ஸ்வைன் ஃப்ளூவைக் கட்டுப்படுத்தினால் தான் பூரணமாக குணமடைய செய்ய முடியும் என தேசிய தொற்றுநோய் அமைச்சகம் கூறியுள்ளது. பன்றி காய்ச்சலுக்கு ஆன்டி-வைரல் மருந்துகளான ஒசெல்டமிவிர் (Oseltamivir) மற்றும் ஷானமிவிர் (Zanamivir) பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குக் கொடுக்கப்படுகின்றன. இதில், ஒசெல்டமிவிர் வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் மட்டும் கொடுக்கப்படுகின்றன. முக்கியமாக, நோய் தொற்று ஏற்பட்டவருக்கு 48 மணி நேரத்திற்குள் சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டும் என தேசிய தொற்றுநோய் அமைச்சகம் கூறியிருக்கிறது. 

முன்கணிப்பு

ஏற்கனவே ஏதேனும் சுவாசக் கோளாறுகள் அல்லது நீரிழிவு போன்ற நோய் உள்ளவர்களுக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் போது, சுவாச செயலிழப்பு, சிறுநீரக செயலிழப்பு அல்லது மரணம் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன என மருத்துவர்கள் கூறுகின்றனர்.  

பாதுகாப்பு

ஸ்வைன் ஃப்ளூவிலிருந்து பாதுகாப்பாக இருக்க, நீங்கள் சில அடிப்படை பாதுகாப்புகளை பின்பற்ற வேண்டும், முகத்திற்கு சுவாச கவசம் அணிதல் அதில் முக்கியமான ஒன்றாகும். தும்மல் அல்லது இருமல் வரும் போது கைக்குட்டை பயன்படுத்துங்கள். சாப்பிடும் முன்பு கைகளை நன்றாக கழுவுங்கள். முடிந்த வரை பொது கழிவறைகளை உபயோகப்படுத்துவதை தவிர்த்திடுங்கள். முக்கியமாக தண்ணீரை நன்கு காய்ச்சி வடிகட்டி பருகுங்கள். 

Leave a Reply