ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் பன்றிக்காய்ச்சல் படுவேகமாக பரவி வரும் நிலையில் அங்கிருந்து தமிழகம் வருபவர்கள் மூலம் பன்றிக்காய்ச்சல் தமிழகத்திலும் பரவி வருவதாக கூறப்படுகிறது. பன்றிக்காய்ச்சல் காரணமாக சென்னையில் ஒருவர் பலியானதை அடுத்து பன்றிக்காய்ச்சலை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்நிலையில், பன்றிக் காய்ச்சல் அறிகுறி உள்ளவர்கள் சென்னை கிண்டியில் உள்ள கிங் இன்ஸ்டிடியூட் என்ற இடத்தில் இலவசமாக பன்றிக்காய்ச்சல் இருக்கின்றதை என்பதை தெரிந்து கொள்ள பரிசோதனை செய்து கொள்ளலாம் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இந்த பரிசோதனைக்கு தனியார் மருத்துவமனை மற்றும் தனியார் பரிசோதனைக் கூடங்கள் ரூ.3 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் கீதாலட்சுமி கூறியுள்ளதாவது:
பன்றிக் காய்ச்சல் 3 வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளது. சாதாரண காய்ச்சல், சளி, இருமல், தொண்டை கரகரப்பு, உடல் வலி, தலைவலி, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவை முதல் வகையாகும். இவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனை தேவையில்லை. ஆனால் டாக்டரிடம் சிகிச்சை பெற வேண்டும். அதிகமான காய்ச்சல், தொண்டை வலி இருந்தால் அவர்களும் அரசு மருத்துவ மனைக்கு சென்று சிகிச்சை பெற வேண்டும். காய்ச்சலின் அளவைப் பொருத்து பரிசோதனை செய்துகொள்ளலாம்.
இந்த 2 வகை அறிகுறி களுடன் மூச்சு விடுவதில் சிரமம், நெஞ்சுவலி போன்ற பிரச்சினைகள் இருந்தால் கண்டிப்பாக அரசு மருத்துவமனைகளில் சேர்ந்து சிகிச்சை பெற வேண்டும். இவர்களுக்கு கட்டாயம் பன்றிக் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட வேண்டும். அரசு மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சலுக்கு தேவையான டாமிபுளூ மாத்திரைகள் இருப்பு உள்ளது. அதனால் யாரும் பயப்பட வேண்டாம்.
பன்றிக் காய்ச்சல் அறிகுறி இருப்பவர்கள் சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட்டுக்கு சென்று இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். பரிசோதனை முடிவுகள் 2 நாளில் வழங்கப்படும். சென்னை அரசு பொது மருத்துவமனை, கோவை, திருச்சி மற்றும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் பன்றிக் காய்ச்சல் பரிசோதனைக்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.