மழைக் காலம், ஃபுளு காய்ச்சலுக்குக் கொண்டாட்டமான காலம். அக்டோபரில் தொடங்கி ஜனவரி இறுதி வரை இதன் தாக்குதல் அதிகமாகும். ஃபுளு காய்ச்சல், இன்ஃபுளுயென்சா காய்ச்சல், வைரஸ் காய்ச்சல் எனப் பல பெயர்களில் அழைக்கப்படுகிற இந்தக் காய்ச்சல், ஒரு அதிதீவிர தொற்றுநோய்.
வைரஸ் கிருமி பாதிப்பு
இன்ஃபுளுயென்சா வைரஸ் (Influenza virus) இந்த நோயை ஏற்படுத்துகிறது. இதில் ஏ,பி,சி என 3 வகைகள் உண்டு. ஏ வகையில் மேலும் பல துணை இனங்கள் உள்ளன. மற்ற வைரஸ் நோய்களைப்போல் இல்லாமல், இது ஒரே நேரத்தில் பல வகை வைரஸ் கிருமிகளால் ஏற்படுவதுதான், இந்த நோயின் அபாயமான தனித்தன்மை.
நோயாளியின் மூக்கு, தொண்டை, வாய், மூச்சுக்குழல், நுரையீரல் போன்ற பகுதிகளில் இந்தக் கிருமிகள் வசிக்கும். அப்போது, அந்த நோயாளி தும்மினாலோ, இருமினாலோ, மூக்கைச் சிந்தினாலோ, சளியைக் காறித் துப்பினாலோ கிருமிகள் காற்றில் பரவி, அடுத்தவர்களுக்கும் தொற்றி நோயை உண்டாக்கும்.
யாரையெல்லாம் அதிகம் பாதிக்கும்?
சுகாதாரம் அற்ற நெருக்கமான இடங்களில் வசிப்பவர்கள், இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், நோய் எதிர்ப்புச் சக்தி மற்றும் ஊட்டச்சத்து குறைந்தவர்கள், முறையாகத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாதவர்கள், ஆஸ்துமா, சர்க்கரைநோயாளிகள் மற்றும் புகை, போதைப் பழக்கம் உள்ளவர்களை இந்த நோய் எளிதில் தாக்கும். மேலும், நெருக்கடி நிறைந்த சந்தை, திருவிழா, ஊர்வலம், திரையரங்குகள், பஸ், ரயில் நிலையங்கள், ஷாப்பிங் மால்கள் போன்ற இடங்களில் மக்கள் மொத்தமாகக் கூடும் போதும் இந்த நோய் பரவுவது எளிதாகிறது.
அறிகுறிகள்:
மூக்கு ஒழுகும். மூக்கடைப்பு, தும்மல் வரும். சளி, இருமல், காய்ச்சல் தொடங்கும். உடல்வலி, தலைவலி, மூட்டுவலி, கைகால் வலி கடுமையாகும். இருமும்போது நெஞ்சு வலிக்கும். உடல் சோர்வு அதிகரிக்கும். பசி குறையும். முதல் மூன்று நாட்களுக்கு இந்த அறிகுறிகள் அதிகத் தொல்லையைக் கொடுத்து, அடுத்துவரும் நாட்களில் படிப்படியாக குறைந்துவிடும். நோய் எதிர்ப்புச் சக்தி உள்ளவர்களுக்கு ஏழே நாட்களில் நோய் தானாகவே குணமாகிவிடும்.
சிக்கல்கள்:
இந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுவது, நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்த குழந்தைகளும், முதியவர்களும்தான். இவர்களுக்குக் காய்ச்சல் கடுமையாவதுடன், மூச்சுக்குழாய் அழற்சி நோய், நுரையீரல் அழற்சி நோய், மூச்சுச் சிறு குழாய் அழற்சி நோய், இதயத்தசை அழற்சி நோய் என்று, பலதரப்பட்டப் பிரச்னைகளை ஏற்படுத்தி, உயிரிழப்பு வரை கொண்டுவந்துவிடும். இந்த ஆபத்தைத் தடுக்க ஃபுளு காய்ச்சலுக்கு முறையாகத் தடுப்பூசி போட வேண்டியது அவசியமாகிறது.
தடுப்பூசி வகை:
இந்தக் காய்ச்சலைத் தடுக்க வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி (Trivalent inactivated vaccine – TIV), உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து (Live attenuated influenza vaccine – LAIV) என இரண்டு வகை உள்ளன. இவற்றில் மொத்தம் மூன்று வித தடுப்பு மருந்துகள் உள்ளன. ஃபுளு காய்ச்சலுக்குக் காரணமான வைரஸ் ஏ வகையில் உள்ள முக்கியமான இரு வகைத் துணை இனங்களைக்கொண்டும், வைரஸ் பி வகைக் கிருமியைக் கொண்டும் இவை தயாரிக்கப்படுகின்றன. இவற்றில் எல்ஏஐவி (LAIV) தடுப்பு மருந்து இந்தியாவில் புழக்கத்தில் இல்லை.
வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசி:
இந்த வைரஸ் கிருமியின் மேலுறை ஆன்டிஜெனை எடுத்து, கோழிக்கருவில் வளர்த்து, இந்த வகைத் தடுப்பூசியைத் தயாரிக்கிறார்கள். குழந்தை பிறந்த 6 மாதத்திலிருந்து 3 வயதுக்குள் 0.25 மி.லி அளவிலும், 3 முதல் 8 வயதுக்குள் அரை மில்லி அளவிலும் தொடை அல்லது புஜத்தில் தசை ஊசியாகப் போட்டுக்கொள்ள வேண்டும். எட்டு வயதுக்குள் முதல் முறையாக இதைப் போடும்போது, முதல் ஊசிக்குப் பிறகு ஒரு மாதம் கழித்து, இரண்டாம் தவணையைப் போட வேண்டும்.
ஒன்பது வயதுக்கு மேல் எனில், அரை மில்லி அளவில் ஒருமுறை மட்டும் போட வேண்டும். இந்தத் தடுப்பூசியை முதல் முறையாக எந்த வயதில் போட்டாலும் அதற்குப் பிறகு வருடத்துக்கு ஒருமுறை மீண்டும் போட வேண்டியதும் அவசியம்.
யாருக்கு மிக அவசியம்?
6 மாதம் முடிந்த குழந்தைகள், கர்ப்பிணிகள், 65 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள், சர்க்கரை நோயாளிகள், ஆஸ்துமா, இதய நோய், கல்லீரல் நோய், சிறுநீரக நோய், எய்ட்ஸ் நோய் போன்ற கடுமையான நோய் உள்ளவர்கள், சுகாதாரத் துறைப் பணியாளர்கள் அவசியம் போட்டுக்
கொள்ள வேண்டும்.
எப்போது மிக அவசியம்?
தமிழகத்தில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பு – அதாவது ஆகஸ்ட் மாதத்தில் இதைப் போட்டுக்கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களில் வசிப்போர் மே மாதத்தில் போட்டுக்கொள்ள வேண்டும். ஏனெனில், இந்தத் தடுப்பூசி போட்டு ஒரு மாதத்துக்குப் பிறகுதான், இந்தக் கிருமிக்கு எதிரான நோய் எதிர்ப்புச் சக்தி மேம்படும்.
யார் போட்டுக்கொள்ளக்கூடாது?
கோழி முட்டை மற்றும் இந்தத் தடுப்பூசி ‘அலர்ஜி’ உள்ளவர்கள் போட்டுக்கொள்ளக்கூடாது; காய்ச்சல் வலிப்பு (Febrile seizure) உள்ளவர்கள், ஜி.பி.எஸ் (Guillain-Barre syndrome – GBS ) எனும் நரம்புத் தசை நோய் உள்ளவர்கள், இந்தத் தடுப்பூசியைப் போட்டுக்கொள்வதற்கு முன்பு, டாக்டரிடம் ஆலோசனை பெறவேண்டும்.
பக்கவிளைவுகள் :
ஊசி போடப்பட்ட இடத்தில் லேசான வலி, வீக்கம், தோல் சிவத்தல் போன்ற தொல்லைகள் ஏற்படலாம். மிதமான காய்ச்சல், உடல்வலி இருக்கலாம். இவை இரண்டு அல்லது மூன்று நாட்களில் சரியாகிவிடும். காய்ச்சலுக்கு ‘பாராசிட்டமால்’ திரவ மருந்து அல்லது மாத்திரை தரலாம்.
உயிர் நுண்ணுயிரி இன்ஃபுளுயென்சா தடுப்பு மருந்து இது ஒரு ‘நேசல் ஸ்பிரே’; மூக்கில் போடக்கூடிய தடுப்பு மருந்து. முதலில் சொல்லப்பட்ட தடுப்பூசியைவிட அதிக ஆற்றல், பாதுகாப்பு கொண்டது என்றாலும், இதை இரண்டு வயதுக்கு மேற்பட்ட, ஆரோக்கியமான குழந்தைகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும். இதயநோய், சிறுநீரக நோய், கல்லீரல் நோய், புற்றுநோய், எய்ட்ஸ் போன்ற நோய் உள்ளவர்களும் கர்ப்பிணிகளும் இரண்டு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளும் இதைப் பயன்படுத்தக் கூடாது.
மாறிக்கொண்டே வரும் தடுப்பூசி!
எந்தத் தடுப்பூசிக்கும் இல்லாத ஒரு தனித்தன்மை டிஐவி (TIV) தடுப்பூசிக்கு உண்டு. பொதுவாக, ஆண்டுதோறும் இந்தக் கிருமியின் தன்மை மாறிக்கொண்டே இருக்கும். ஒரு ஆண்டில் போட்ட தடுப்பூசியையே அடுத்த ஆண்டில் போட்டால் பலன் தராது. எனவே, உலகச் சுகாதார நிறுவனம் ஆண்டுக்கு இரண்டு முறை தெற்கு ஆசியாவில் பரவுகிற கிருமியின் தன்மையை ஆராய்ந்து, அதன் அடிப்படையில் ஒவ்வோர் ஆண்டும் தடுப்பு மருந்து தயாரிக்கச் சொல்கிறது. அதைத்தான் ஒவ்வோர் ஆண்டும் போட்டுக்கொள்ள வேண்டும்.
சுத்தம் காப்போம்… நோயைத் தடுப்போம்!
குழந்தைகளுக்குக் குறைந்தது ஒரு வருடம் தாய்ப்பால் புகட்டுவதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யலாம். இதன் மூலம் ஃபுளு காய்ச்சல் வராமல் தடுக்கலாம். கைகளை சோப்புப்போட்டு நன்றாகக் கழுவது, முகத்தைச் சுத்தமாக வைத்துக்கொள்வது, தும்மல், இருமலின்போது கைகுட்டையால் மூக்கை மறைத்துக்கொள்வது, புகை, மதுவை மறப்பது போன்ற அடிப்படை சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம் இந்தக் காய்ச்சலுக்குக் கடிவாளம் போடலாம்.
வேகமாக பரவும் ஃபுளு இன்ஃபுளுயென்சா வைரஸ் காய்ச்சல் ஓர் இடத்தில் ஆரம்பித்து, உடனடியாக லட்சக்கணக்கான மக்களைப் பாதித்து, உயிர்ப்பலியை ஏற்படுத்தும் ஒரு கொள்ளை நோய். இதற்குச் சில உதாரணங்கள்… 1918-ல் பரவிய ஸ்பேனிஸ் ஃபுளு, 1957-ல் பரவிய ஆசியன் ஃபுளு, 1968-ல் பரவிய ஹாங்காங் ஃபுளு, இப்போதைய ஸ்வைன் ஃபுளு (பன்றிக் காய்ச்சல்). இந்தியாவில் பன்றிக் காய்ச்சல் (Swine Flu) பரவும் போது, ஃபுளு காய்ச்சலுக்குப் போடப்படும், வீரியம் குறைக்கப்பட்ட நுண்ணுயிரி மூவகைத் தடுப்பூசியைப் போட்டுக் கொண்டாலே, பன்றிக் காய்ச்சல் வராது.