வோக்ஸ்வேகன் டீசல் கார்களுக்கு சுவிஸ் அரசு தடை.

வோக்ஸ்வேகன் டீசல் கார்களுக்கு சுவிஸ் அரசு தடை.
volkswagen
உலகில் உள்ள பெரும்பான்மையான மக்கள் விரும்பி வாங்கிய வோக்ஸ்வேகன் கார்கள் வெளியிடும் புகையில் மாசுக்கட்டுப்பாட்டு அளவை குறைத்துக் காட்டும் மென்பொருள் பொருத்தி மோசடி நடந்திருப்பதை, கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகமை கண்டறிந்து அந்த உண்மையை பொதுமக்களிடம் வெளிப்படுத்தியது. இதனால் பொதுமக்களின் நற்பெயரை பெற்றிருந்த வோக்ஸ்வேகன், ஒரே நாளில் தன்னுடைய பெயரை இழந்தது.

உலகம் முழுவதும் ஒரு கோடியே 80 லட்சம் டீசல் கார்களின் புகையளவில் மோசடி செய்திருப்பதை அந்த நிறுவனமும் ஒப்புக்கொண்டு மன்னிப்பு கேட்டுள்ளது. இது குறித்து அமெரிக்க அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் தென் கொரியா, பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜெர்மனி, இங்கிலாந்து ஆகிய நாடுகள் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பில் மிகவும் கண்டிப்பு காட்டும் சுவிட்சர்லாந்து வோக்ஸ்வேகன் டீசல் கார் விற்பனைக்கு தற்காலிக தடை விதித்துள்ளது. இந்த தடையானது யூரோ-5 மாசு தரக்கட்டுப்பாடு கொண்ட கார்களுக்கு மட்டுமே பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் புகையளவில் மோசடி பற்றி விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தை அடுத்து வேறு சில நாடுகளும் இந்த கார்களுக்கு தடைவிதிக்க முடிவு செய்திருப்பதாக வந்துள்ள தகவலால் வோக்ஸ்வேகன் நிறுவனம் அதிர்ச்சி அடைந்துள்ளது.

Leave a Reply