தேர்தல் தோல்விக்கு ராகுல்காந்திதான் பொறுப்பு ஏற்கவேண்டும். அவருடைய கோமாளித்தனமான தேர்தல் பிரச்சாரத்தால்தான் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது என கடுமையாக விமர்சனம் செய்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
கேரளாவின் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர் முஸ்தபா என்பவர் நேற்று அளித்த ஒரு பேட்டியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் படுதோல்விக்கு காரணம் ராகுல்காந்தியின் செயல்பாடுதான். ஜோக்கர் போல அவர் செயல்பட்டதால்தான் காங்கிரஸ் கட்சி, எதிர்க்கட்சி அந்தஸ்தை கூட பெற முடியவில்லை. எனவே ராகுல்காந்தியை காங்கிரஸின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் வெளியேற்றிவிட்டு, பிரியங்கா காந்தியை காங்கிரஸ் கட்சியின் துணைத்தலைவராக நியமிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
முஸ்தபாவின் பேட்டி அகில இந்திய அளவில் கடும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க காங்கிரஸ் தலைமை முடிவு செய்தது. இதுகுறித்து “கேரள மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் வி.எம்.சுதீரன் கூறுகையில், “முன்னாள் அமைச்சர் முஸ்தபா, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுகிறார். அவருடைய பேச்சுக்கு அவரிடம் விளக்கம் பெறப்படும்” என்று கூறியுள்ளார்.