சென்னையின் முக்கிய வர்த்தகப்பகுதியான தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள தனியார் ஜவுளிக்கடைக்கு சொந்தமான பிளாஸ்டிக் கிடங்கு ஒன்றில் இன்று அதிகாலை பயங்கர தீவிபத்து ஏற்பட்டதால், 8 பேர் படுகாயம் அடைந்தனர். மேலும் தீயில் கருகி பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாகி உள்ளது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இன்று அதிகாலை ரங்கநாதன் தனியார் ஜவுளிக்கடையின் வணிக வளாக கட்டிடத்தின் நான்காவது மாடியில் உள்ள பிளாஸ்டிக் கிடங்கில் மின்கசிவு காரணமாக திடீரென பெரும் தீ விபத்து ஏற்பட்டது. அந்த தளத்தில் அந்த கடையில் பணிபுரியும் 8 பேர் தங்கியிருந்ததால் அவர்கள் அனைவரும் தீயில் சிக்கி படுகாயம் அடைந்தனர்.
இந்த தீ விபத்து குறித்து தகவல் தெரிந்தது கிண்டி, தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை பகுதிகளில் இருந்து 17 தீயணைப்பு வாகனங்களில் வந்த தீயணைப்பு படை வீரர்கள் பலமணி நேரம் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். தீப்பிடித்த பொருட்கள் அனைத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் என்பதால் தீயை கட்டுபடுத்துவதில் பெரும் சிரமம் ஏற்பட்டதாக தீயணைக்கும் வீரர்கள் செய்தியாளர்களிடம் கூறினர். அவர்களுக்கு சென்னை மாநகராட்சியில் ஐந்து தண்ணீர் லாரிகள் உதவி செய்தன.
இந்த தீ விபத்தில் காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும், சேத மதிப்பு கணக்கிடப்பட்டு வருவதாகவும் தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் கூறினார்.