சமீபத்தில் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட திமுக தலைவர் கருணாநிதியின் மகன் மு.க.அழகிரி நேற்று தஞ்சாவூரில் நடந்த கூட்டம் ஒன்றில் மிக ஆவேசமாக பேசினர்.
திமுக தலைவர் கருணாநிதியை ஒரு மர்ம கூட்டம் மிரட்டி பணிய வைத்துள்ளது என்றும், மத்திய அமைச்சராக இருந்த டி.ஆர்.பாலு ஸ்ரீபெரும்புதூர் மக்களுக்கு எதுவும் செய்யாததால்தான், தஞ்சாவூருக்கு ஓடி வந்துள்ளார் என்றும், அவரை இந்த ஊர் மக்கள் தோல்வியடைய செய்து விரட்ட வேண்டும் என்றும் பேசியுள்ளார்.
மத்திய அமைச்சராக இருந்தபோது செய்த முறைகேடுகளால்தான் 10 கப்பல்களுக்கு சொந்தக்காரராக டி.ஆர்.பாலு மாறினார். அவரால்தான் திமுகவுக்கு கெட்ட பெயர் வந்தது என்றும் கூறிய அழகிரி, தாம் தனிக்கட்சி தொடங்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், தேர்தலுக்கு பின்னர் துரோகிகள் அனைவரும் திமுகவில் இருந்து விரட்டியடிக்கப்படுவார்கள் என்றும் பேசியுள்ளார். திமுகவையும், அதன் தலைவரையும் காக்க வேண்டிய கடமை தனக்கு இருப்பதால் தான் தனிக்கட்சி தொடங்கபோவதில்லை என்றார்.