2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தி கடந்த ஏப்ரல் மாதம் வரைவு அறிக்கையை வெளியிட்டது. அதில் பிரதமர் மற்றும் அப்போதைய நிதி மந்திரி ப.சிதம்பரம் ஆகியோருக்கு இதில் தொடர்பில்லை,ஆ.ராசா தான் முழு காரணம் என்று கூறப்பட்டிருந்தது. கூட்டுக்குழுவின் தலைவராக காங்கிரசை சேர்ந்த பி.சி.சாக்கோ இருக்கிறார்.
விசாரணை அறிக்கையை ஏற்றுக்கொள்ளும் முன், மேலும் பல ஆவணங்களை ஆய்வு செய்யவும், அதிகாரிகள் பலரை விசாரணை நடத்தவும் தி.மு.க. சார்பில் டி.ஆர்.பாலு எம்.பி., பி.சி.சாக்கோவிடம் வேண்டுகோள் விடுத்தார். ஆனால் அதனை பி.சி.சாக்கோ ஏற்றுக்கொள்ள மறுத்தார். இந்நிலையில் நேற்று டி.ஆர்.பாலு. பாராளுமன்ற சபாநாயகர் மீரா குமாருக்கு ஒரு கடிதம் அனுப்பினார்.
அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது, 29.10.13 அன்று சமர்ப்பிக்கப்பட்ட ஜே.பி.சி. அறிக்கையில் நான் கூட்டுக்குழுத் தலைவருக்கு அனுப்பிய கடிதம் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. அந்தக் கடிதத்தில் நான் முன்னாள் தொலைத்தொடர்பு மந்திரி ஆ.ராசாவின் வாக்குமூலம் பற்றியும் அவர் அனுப்பிய பல கடிதங்கள் பற்றியும் குறிப்பிட்டிருந்தேன். ஆ.ராசா கூட்டுக்குழுவின் முன் ஆஜராகி தன்னுடைய வாதங்களை முன்வைக்க அனுமதிக்கப்படவில்லை. இந்த விஷயத்தில் பாராளுமன்றக் கூட்டுக்குழுத் தலைவரின் நடவடிக்கை பாரபட்சமானது.
அவர் சமர்ப்பித்துள்ள அறிக்கை அரைகுறையானது. முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய அம்சங்களைப் பற்றிய விவரங்கள் அறிக்கையில் விடுபட்டுள்ளது. எனவே, இந்த அறிக்கையை ஜே.பி.சி. கூட்டுக்குழுத் தலைவருக்கு திருப்பி அனுப்பி, அந்த அறிக்கையில் ஆ.ராசாவின் வாக்குமூலத்தையும் சேர்த்து மீண்டும் சமர்ப்பிக்குமாறு அவரை வலியுறுத்த வேண்டுகிறேன் என்று அவர் கடிதத்தில் கூறியுள்ளார்.