தற்போது தொல்லியல் துறைக்கு சொந்தமாக இருக்கும் உலக அதிசயங்களில் ஒன்றான தாஜ்மகாலை வஃக்பு வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரபிரதேச அமைச்சர் ஒருவர் கூறிய கருத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. அவருக்கு பதிலளித்துள்ள பாஜக அரசு, தாஜ்மகாலை வஃக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது என்று கூறியுள்ளது.
உலகின் ஏழு அதிசயங்களில் ஒன்றாக விளங்கும் தாஜ் மகால் இந்தியாவின் மிக முக்கிய சுற்றுலாதலங்களுள் ஒன்று. இதை வஃக்பு வாரியத்திடம் (இஸ்லாமிய வழிபாட்டு தலங்களை நிர்வகிக்கும் அமைப்பு) ஒப்படைக்க வேண்டும் என்றும் தாஜ்மகாலை வஃக்பு வாரியத்திற்கு உள்பட்ட சொத்து என மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரப்பிரதேச மாநில அமைச்சரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான அசம் கான் கூறியிருந்தார்.
இதற்கு கண்டனம் தெரிவித்து விளக்கம் அளித்த உத்தரப்பிரதேச மாநில பா.ஜ.க. தலைவரான லட்சுமிகாந்த் பாஜ்பாய், ”ராஜா ஜெய்சிங் என்பவரிடம் இருந்து தேஜோ மஹாலயா கோயிலின் நிலத்தின் ஒரு பகுதியை தாஜ் மகாலை கட்டுவதற்காக மொகலாய மன்னர் ஷாஜஹான் விலைக்கு வாங்கினார். அதற்கான ஆவண ஆதாரம் எங்களிடம் உள்ளது.
இந்த சொத்தினை (தாஜ் மகால்) 1920 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் அரசு இந்திய தொல்லியல் துறையிடம் ஒப்படைத்துவிட்டது. இந்திய தொல்லியல் துறைக்கு சொந்தமாகிவிட்ட தாஜ் மகாலை வஃக்பு வாரியத்திடம் ஒப்படைக்க முடியாது” என்று கூறியுள்ளார்.