கல்லூரியில் படிக்காமல் கல்லூரி மாணவி ஆனேன்: தமன்னா
பள்ளியில் படிக்கும்போதே நான் சினிமாவில் நடிக்க வந்துவிட்டதால் என்னால் கல்லூரி வாழ்க்கையை அனுபவிக்க முடியவில்லை. இருப்பினும் கல்லூரியில் படிக்காமலேயே கல்லூரி மாணவியாக எனது முதல் படத்திலேயே நடித்தேன்’ என்று நடிகை தமன்னா பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது:
“சினிமா ஒரு கல்லூரி மாதிரி. தினமும் நிறைய விஷங்களை கற்றுக்கொடுக்கிறது. நான் பள்ளி படிப்பை முடிக்கும் முன்பே சினிமாவுக்கு வந்து விட்டேன். கல்லூரியில் படிக்கும் வாய்ப்பு கிடைக்காத வருத்தம் இருந்தது. ஆனால் சினிமாவில் அந்த அனுபவங்கள் எனக்கு கிடைத்தன. நான் தெலுங்கில் முதலாவது நடித்த ‘ஹேப்பி டேஸ்’ படத்தில் கல்லூரி மாணவியாகத்தான் வந்தேன். வாழ்க்கையில் நடக்காதது சினிமாவில் நடந்தது மிகவும் மகிழ்ச்சி.
பாடங்களை தீவிரமாக படிப்பது, தேர்வுக்கு தயாராவது, ரிசல்ட்டுக்காக காத்து இருப்பது என்று எல்லா அனுபவங்களும் கிடைத்தன. சைரா படத்தில் சிரஞ்சீவியுடன் நடிக்கிறேன். இது சரித்திர படம். இதனால் வரலாற்று கதைகளை படித்து அந்த காலகட்டத்து வாழ்க்கை முறைகள் பற்றி தெரிந்து கொள்கிறேன். ஒவ்வொரு படத்திலும் புதிய விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். பாகுபலி படத்துக்காக கத்தி பிடித்து சண்டை போடுவது, குதிரை சவாரி பயிற்சிகள் எடுத்தேன். இன்னொரு படத்துக்காக நடனம் கற்றேன்.” என்று கூறியுள்ளார்.
தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள சீனுராமசாமியின் ‘கண்ணே கலைமானே’ திரைப்படம் இம்மாத இறுதியில் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது