செம்மரக் கடத்தலில் தொடர்பு. தமிழ் நடிகர் சரவணன் உள்பட 6 பேர் அதிரடி கைது.

red sandle newஆந்திர மாநிலம் திருப்பதி வனப்பகுதியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஆந்திர போலீசார் நடத்திய என்கவுண்டரில் 20 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரம் இரு மாநிலங்களையும் பதட்டத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த கடத்தலில் சம்பந்தப்பட்ட முக்கிய புள்ளிகளை பிடிக்க ஆந்திர போலீஸார் தீவிர நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர். இதன் ஒரு பகுதியாக செம்மரக்கடத்தலில் சம்பந்தப்பட்டதாக கருதப்பட்ட தமிழ் திரைப்பட  நடிகர் உள்பட 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் தீவிர விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

செம்மரக் கடத்தலில் ஈடுபடுவர்களை பிடிக்க சித்தூர் மாவட்டம், பெங்களூரு – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஆந்திர போலீஸார் நேற்று இரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டு இருந்த போது அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். போலீசார் காரை சோதனை செய்து கொண்டிருந்தபோது, காரில் இருந்த 6 பேர் திடீரென தப்பி ஓடினர். போலீசார் அவர்களை துரத்திச்  சென்று மடக்கி பிடித்தனர். அவர்கள் வந்த காரில் 11 செம்மர கட்டைகள் இருப்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் காரையும், செம்மரக்  கட்டைகளையும் பறிமுதல் செய்து, சித்தூர் வன அலுவலகத்தில் ஒப்படைத்தனர். கைதானவர்களில் ஒருவர் தமிழ் நடிகர் சரவணன் என்று கூறப்படுகிறது. இவர் சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், அவரது தந்தை சந்திரன் தயாரிப்பில் ‘மன்னவரு’ என்ற தமிழ்ப் படத்தில் சரவணன் நடித்துள்ளார் என்பதும் தெரியவந்தது. ஆனால் இந்த படம் இன்னும் வெளியாகவில்லை. இதனையடுத்து சென்னையில் உள்ள நடிகர் சரவணனின் 2 குடோன்களில் ஆந்திர போலீசார் தீவிர சோதனை செய்தனர். அங்கிருந்து 165 செம்மர கட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. ஆனால் ஒருசில செய்தி நிறுவனங்கள் ‘பருத்திவீரன்’ படத்தில் நடித்த சரவணன் என தவறாக செய்தி வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து போலீஸார் செய்தியாளர்களிடம் கூறியபோது, “சரவணனின் வங்கிக்  கணக்கு மூலமாக யாருக்கெல்லாம் பணப்  பரிமாற்றம் நடந்துள்ளது என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். இதில் பல முக்கிய புள்ளிகள், சினிமா பிரபலங்கள் சிக்குவார்கள் என்று தெரிகிறது. செம்மர கட்டை கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்களில் பலர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் தான். அவர்களில் பலர் சென்னையை மையமாக வைத்து தொழில் செய்து வந்துள்ளார்கள். சரவணனின் சகோதரர் லெட்சுமணன் என்பவரும் ஒரு படத்தில் தயாரிப்பாளராக இருந்துள்ளார். அவரிடமும் விசாரணை நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

ஆந்திர மாநில வனத்துறை அமைச்சர்  கோபாலகிருஷ்ண ரெட்டி செய்தியாளர்களிடம் பேசுகையில், ‘சட்டத்தில் உள்ள ஓட்டை மூலமாக செம்மர கட்டை கடத்தல்காரர்கள் வெளியே வந்து விடுகிறார்கள். எனவே வனத்துறை சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும். சட்டம் கடுமையாக்கப்படும். ஒரு மரத்தை வெட்டினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வழி செய்யும் வகையில் சட்டம் கொண்டு வரப்படும். இதற்காக அரசாணை விரைவில் வெளியிடப்படும். பின்னர் சட்டம் இயற்றப்படும்’ என்று தெரிவித்தார்

Leave a Reply