அன்புள்ளம் கொண்ட முதல்வரை அவமதிப்பதா? தமிழ் திரையுலகினர் கண்டனம்
தமிழக மக்களுக்கு இரவு-பகல் பாராமல் ஓயாது உழைத்து வரும் அன்புள்ளம் கொண்ட எங்களது மாண்புமிகு தமிழக முதல்வரை சில கன்னட அமைப்புகளும், சில கன்னட திரையுலகினரும் அவமதிக்கும் வகையில் பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிப்பதாக தமிழ் திரையுலகை சேர்ந்த அனைத்து அமைப்புகளும் ஒன்றிணைந்து கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
கடந்த சில நாட்களாக கர்நாடகாவில் காவிரி பிரச்சனை காரணமாக விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து வரும் நிலையில் இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம், தமிழ்நாடு இயக்குனர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர் சங்கம், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனம் மற்றும் தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் ஆகிய அமைப்புகள் ஒன்றாக சேர்ந்து தமிழ் திரையுலகின் சார்பில் 12.09.2016 அன்று கூட்டறிக்கை வெளியிட்டுள்ளார்கள். அதில் கடந்த சில நாட்களாக காவிரி நீர் தமிழக விவசாயிகளுக்கு திறந்து விடப்பட்டிருப்பதை எதிர்த்து, கர்நாடக மாநிலத்தில் நடக்கின்ற வன்முறைகள் எங்களுக்கு மிகுந்த கவலையை அளிக்கிரது. நாம் எல்லோரும் பாரத் நாட்டின் புதல்வர்கள், இந்திய ஒருமைப்பாடை மதித்து நடக்கும் சகோதரர்கள் என்ற கருத்துக்கு சேதம் விளைந்துவிட்டதே எனு வேதனையை அளிக்கின்றது.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விடவேண்டுமென்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பை உங்களில் சாதாரண மனிதர்கள் புரியாமல் எதிர்ப்பது வேதனையை தருகிறது.
எங்களது மாண்புமிகு தமிழக முதலமைச்சர் புரட்சித்தலைவி அம்மா அவர்கள், கூடங்குளம், நெய்வேலி ஆகிய இடங்களில் இருந்து தமிழ்நாட்டு மின்சாரத்தை கர்நாடகத்திற்கு தாராளமாக அளித்து கொண்டிருக்கிறார். எங்களது புரட்சித்தலைவி அம்மா அவர்கள் நல்ல செயல்பாடுகளை முறையோடு செய்பவர். அவர் முல்லை பெரியார் அணையின் நீர்மட்டத்தை 135 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்துவதற்கு பாடுபட்டவர். காவிரு நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசாணை புத்தகத்தில் பதிவு செய்ய வழிவகுத்தவர்.
தமிழக மக்களை அன்போடு அரவணைத்து பாசத்தோடு வழிநடத்துபவர். அவர் வன்முறையை விரும்பாதவர். அதனால்தான் நாங்களும் வன்முறையை நம்பாமல் அறப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தமிழக மக்களுக்கு இரவு-பகல் பாராமல் ஓயாது உழைத்து வரும் அன்புள்ளம் கொண்ட எங்களது மாண்புமிகு தமிழக முதல்வரை சில கன்னட அமைப்புகளு, சில கன்னட திரையுலகினரும் அவமதிக்கும் வகையில் பேசியதை நாங்கள் வன்மையாக கண்டிக்கின்றோம்.
முகப்புத்தகத்தில் (Face Book) ஒரு தமிழ் இளைஞன் தெரிவித்த கருத்துக்கு, அவரை 10-க்கும் மேற்பட்ட கன்னட இளைஞர்கள் தாக்குவதை வீடியோ காட்சியில் பதிவு செய்து அதை வெளியிடுவது நம் நல்லுறவுக்கும், நட்புறவுக்கும் உகந்தது இல்லை. எங்களது தமிழ் மக்கள் கர்நாடகத்தில் வாழ்கிறார்கள். அதைபோலவே உங்களது கன்னட மக்களும் தமிழ் நாட்டில் வாழ்கிறார்கள். இந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரங்களை ஒருசிலரின் வெறிச்செயல்களால் பாதிக்கப்படுவதை நாம் அனைவரும் பொறுப்புணர்வோடு ஒன்று சேர்ந்து வன்முறையை தடுக்க வேண்டும். எல்லோரும் பாதுகாப்புடன் வாழவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
இன்றைய நிகழ்வு நாளை சரித்திரம். வருங்காலத்தில் நம் சந்ததியினர் புரட்டிப்பார்க்கும்போது…தயவுசெய்து இம்மாதிரியான கருப்புப் பக்கங்களை தவிர்ப்போம்.
பேச்சுவார்த்தைகள் மூலம், சட்டத்தின் மூலமும், பிரச்சனைக்கு தீர்வு கண்டு அவர்களுக்கு பொன்னான பக்கங்களை விட்டுச் செல்வோம்.