தமிழக சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று முதல் தொடங்கியது. தமிழக முதல்வரும் நிதியமைச்சருமாகிய ஓ.பன்னீர்செல்வம், 2015-16-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை இன்று காலை 10மணியளவில் தாக்கல் செய்தார்.
தமிழக அரசின் 2015-16 நிதி ஆண்டுக்கான பட்ஜெட், சட்டப் பேரவையில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை பேரவையில் வெகுவாக பாராட்டிப் ஓ.பன்னீர்செல்வம் பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.
2015-2016 ஆம் ஆண்டின் தமிழக பட்ஜெட் உரையின் முக்கிய அம்சங்கள்:
மாநிலத்தின் வரி வருவாய் கடந்த 2 ஆண்டுகளில் உயரவில்லை. இதற்கு பொருளாதார தேக்க நிலையே காரணம்.
மத்திய அரசின் உதவிகள் தமிழகத்துக்கு கிடைக்கவில்லை.
உலக பொருளாதார மந்த நிலையில் தமிழகத்துக்கும் பாதிப்பு.
14-வது நிதி ஆணையம் தமிழகத்துக்கு பெரும் அநீதி இழைத்துள்ளது.
மாநிலங்கள் சொந்த நிதியில் இயங்க வேண்டும் என கூறுவதை ஏற்க முடியாது.
2015-16 நிதியாண்டுக்கான நிதி ஒதுக்கீடு ரூ.55,100 கோடி.
மாநில சமச்சீர் வளர்ச்சி நிதி மூலம் 24 மாவட்டங்களில் ரூ.181 கோடி செலவில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
ஊராட்சி கூட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.255 கோடி ஒதுக்கப்படும்.
கிராமப்புற வறுமையை ஒழிக்க தகுதியான குடும்பங்கள் கண்டறியும் பணி விரைவில் நிறைவு பெறும். அதன் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட குடும்பங்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
மாநிலத்தில் சட்டம் ஒழுங்கையும், மத நல்லிணக்கத்தையும் காவல்துறை சிறப்பாக பேணி பாதுகாத்து வருகிறது.
காவல்துறை வளர்ச்சிக்கு ரூ.5568.81 நிதி கோடி ஒதுக்கீடு.
காவல்துறைக்கு கட்டங்கள் கட்ட ரூ.538.49 கோடி நிதி ஒதுக்கீடு.
சிறைத்துறை கட்டமைப்பை மேம்படுத்து ரூ.227.03 கோடி நிதி ஒதுக்கீடு.
சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க அரசு நடவடிக்கை.
சாலை பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக ரூ.165 கோடி ஒதுக்கீடு.
தீயணைப்புத் துறைக்கு ரூ.10.78 கோடி நிதி ஒதுக்கீடு.
169 புதிய நீதிமன்றங்கள் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த நிதியாண்டில் 3.2 லட்சம் மக்களுக்கு வீட்டு மனை பட்டாக்கள் வழங்கப்படும்.
வேளாண் துறைக்கு ரூ.6613.68 கோடி நிதி ஒதுக்கீடு. இதுவரை இல்லாத அளவு அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தட்டுப்பாடு இல்லாமல் உரங்கள் கிடைக்க ரூ.150 கோடி ஒதுக்கீடு.
விவசாயிகளுக்கு பயிர்க்கடனாக ரூ.5500 கோடி வழங்க இலக்கு. கடந்த நிதியாண்டைவிட பயிர்க்கடன் அதிகரிக்கப்பட்டுள்ளது.
முறையாக கடன் செலுத்துபவர்களுக்கு வட்டியில்லாமல் கடன் வழங்கப்படும்.
சாதாரண நெல் குவிண்டால் ரூ.50, சன்னரக நெல் குவிண்டாலுக்கு ரூ.70 மானியம் வழங்கப்படும்.
கால்நடை பராமரிப்புக்கு முக்கியத்துவம். விலையில்லா கறவைப் பசுக்கள், ஆடுகள் வழங்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
12,000 கறவைப் பசுக்கள், 6 லட்சம் செம்மறி ஆடுகள் வழங்கப்படும்.
புதிதாக 25 கால்நடை மருந்தகங்கள் அமைக்கப்படும்.
கால்நடை தீவன உற்பத்திக்கு ரூ.25 கோடி ஒதுக்கீடு.
மீன்வளத் துறைக்கு ரூ.278 கோடி நிதி ஒதுக்கீடு.
மேகேதாட்டுவில் கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும்.
மீன்பிடி தடைக் காலங்களில் மீனவர்களுக்கு வழங்கப்படும் நிதியுதவிக்காக ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.
பொது விநியோக திட்டத்தில், உணவு மானியத்துக்கு ரூ.5,300 கோடி நிதி ஒதுக்கீடு.
உணவு தானிய சந்தை விலை கட்டுப்பாட்டுக்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
நதி நீர் இணைப்புக்கு ரூ.253.5 கோடி நிதி ஒதுக்கீடு.
விலங்குகளால் மனிதர்களுக்கு ஏற்படும் ஆபத்துக்களை தடுக்க அரசு சிறப்பு கவனம் செலுத்துகிறது.
மின்சாரம்:
மின் துறை தேவைக்கும், உற்பத்திக்கும் இடையேயான இடைவெளி வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
24.6.2014 வரை அதிகபட்ச மின் தேவையான, 13,775 மெகாவாட் மின் தேவையை மாநிலம் நிறைவு செய்துள்ளது.
புதிய மின் திட்டங்கள் விரைவில் நிறைவேற்றப்படும்.
மின்சார துறைக்கு ரூ.13,586 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சூரிய ஒளி உள்ளிட்ட புதுப்பித்தக்க மின்சார உற்பத்தியில் தேசிய அளவில் தமிழகம் முதலிடம்.
நெடுஞ்சாலை துறைக்கு ரூ.8828 கோடி நிதி ஒதுக்கீடு.
வேலையில்லா இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்க ரூ.1.5 கோடி ஒதுக்கீடு.
டீசல் மானியங்களுக்காக ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
மாணவ, மாணவி இலவச பயணத்துக்காக ரூ.480 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.5422 கோடி நிதி ஒதுக்கீடு.
நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.3926 கோடி நிதி ஒதுக்கீடு.
குக்கிராமங்கள் மேம்பாட்டுக்கு ரூ.750 கோடி நிதி ஒதுக்கீடு.
சூரிய ஒளி பசுமை வீடு திட்டத்தில் மேலும் 60,000 வீடுகள் கட்டப்படும். அதற்கு ரூ.1260 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்.
தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழகம் முதலிடம்.
ஒருங்கிணைந்த நகர்ப்புற வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.
சென்னை மாநகர வளர்ச்சிக்கு ரூ.500 கோடி நிதி ஒதுக்கீடு.
தமிழகத்தில் உள்ள 12 மாநகராட்சிகளையும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சேர்க்க ரூ.400 கோடி நிதி ஒதுக்கீடு.
மெட்ரோ ரயில் திட்டத்துக்காக ரூ.615.78 கோடி நிதி ஒதுக்கீடு. இந்த ஆண்டு முதல் சென்னை மெட்ரோ ரயில் திட்டம் படிப்படியாக இயக்கப்படும்.
ஏழை கர்ப்பிணிப் பெண்கள் நிதியுதவி திட்டத்துக்கு ரூ.668 கோடி நிதி ஒதுக்கீடு.
2 லட்சம் பேருக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி அளிக்கப்படும்.
முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்துக்கு ரூ.781 கோடி ஒதுக்கீடு.
107 தொடக்கப்பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாக தரம் உயர்த்தப்படும்.
அரசுப் பள்ளிகளில் 100% கழிப்பறை வசதி செய்யப்பட்டுள்ளன.
பள்ளி கட்டமைப்பை மேம்படுத்த ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சுற்றுலாத் துறை மேம்பாட்டுக்கு ரூ.183 கோடி நிதி ஒதுக்கீடு.
அன்னதான திட்டம் தமிழகம் முழுவதும் மேலும் 206 கோயில்களுக்கு விரிவுபடுத்தப்படும்.
12,609 அங்கன்வாடி மையங்களுக்கு சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படும்.
பெண் குழந்தை பாதுகாப்பு திட்டத்துக்கு ரூ.140 கோடி நிதி ஒதுக்கப்படும்.
மேலும் 6.62 லட்சம் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்படும்.
விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி வழங்க ரூ.2000 கோடி நிதி ஒதுக்கீடு.
திமுக வெளிநடப்பு:
அவை கூடியதும், பட்ஜெட் உரையை ஒத்திவைத்துவிட்டு முக்கிய பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வேண்டும் என திமுகவினர் கோரிக்கை விடுத்தனர். ஆனால், இதற்கு பேரவை தலைவர் அனுமதி அளிக்காததால், திமுகவினர் வெளிநடப்பு செய்தனர்.
அலுவல் ஆய்வுக் குழு:
பட்ஜெட் தாக்கலுக்குப் பிறகு பேரவைத் தலைவர் தலைமையில் அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடக்கிறது. இதில், கூட்டத் தொடரை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும்.