‘ஜெபம் மூலம் நோய் தீரும் என்பது மூடநம்பிக்கை. உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி

umasankarஐ.ஏ.எஸ் அதிகாரியான உமாசங்கர், கிறிஸ்தவ மதக்கூட்டங்களில் பேசி வருவதற்கு தடைபோட்டிருக்கிறார் தமிழக அரசின் தலைமைச் செயலாளர். இதையடுத்து, ”அரசு போட்டுள்ள உத்தரவுக்கு மேலானது, இயேசு எனக்கு பிறப்பித்து உள்ள உத்தரவு. என்னுடைய உயிரைக் காத்தவர் ஏசு. அதனால் அதைச் செய்தே ஆகவேண்டும். ஆனால், இப்போதைக்கு அரசு உத்தரவுக்கு மரியாதை கொடுத்து, என் பிரசங்க கூட்டங்களை ரத்து செய்து இருக்கிறேன்’ என்று பதில் கூறியிருக்கிறார் உமாசங்கர்.

கூடவே, ‘ஒவ்வொரு நாளும் மாலை 6 மணிக்கு மேலும், சனி, ஞாயிற்றுகிழமைகளிலும் நான் என்ன செய்கிறேன் என்பது எல்லாம் என் தனிப்பட்ட உரிமை. நான் மதப்பிரசாரம் செய்யவில்லை. இயேசு பற்றி மக்களிடம் பேசும்போது, அவர்களின் வியாதிகள் குணமாகின்றன… பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளை கிடைக்கிறது. இதற்கு என்னிடம் ஆதாரம் இருக்கிறதுÕ என்றும் கூறியிருக்கிறார்.

இதுகுறித்து ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுமார் மற்றும் சென்னை உயர்நீத்ஹிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி ஆகியோர் கூறியிருக்கும் கருத்துக்களை பார்ப்போம்.

ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சிவகுமார்: , ”அவர் எந்த மதத்தைச் சார்ந்து இருந்தாலும், தனிப்பட்ட வகையில் இந்திய அரசியல் அமைப்பின்படி அதைப் பின்பற்றத் தடை இல்லை. ஆனால், அரசு அதிகாரியாக பணியில் இருப்பவர், தன்னுடைய மதம், சாதி போன்றவற்றை பொதுஇடத்தில் பரப்புவது, ஆதரித்துப் பேசுவது… அரசு அலுவலர்களின் நன்னடத்தை விதிகளுக்கு எதிரானது. நன்னடத்தை விதிகளில் குறிப்பாக, இப்படி எதுவும் சொல்லப்படவில்லை என்றாலும், அரசு அதிகாரிகள் இதுபோன்ற காரியங்கள் செய்வதால் பொதுமக்களுக்கு பொது நிர்வாகம் மீது அவநம்பிக்கை ஏற்பட்டுவிடும்.

ஓர் அரசு அலுவலர் அரசு விதிமுறைகளை மீறும்போது, அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குப் பதிலாக, ‘நீ இதைச் செய்யக் கூடாது’ என அறிவுரை செய்திருப்பது தேவையில்லாத செயல். இதுபோன்று கீழ்மட்டப் பணியாளன் செய்தால், அரசு அறிவுரை வழங்கிக் கொண்டிருக்குமா… உடனே நடவடிக்கைதானே எடுக்கும். மற்றபடி இது எல்லாம் விளம்பரத்தை தேடிக்கொள்ள செய்யும் செயல்தான்”என்று உமாசங்கரைச் சாடினார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் அருள்மொழி: ”அரசு அதிகாரிகள் தங்களுடைய மத அடையாளங்களை தனிப்பட்ட முறையில் வைத்து இருப்பதுதான் நல்லது. ஆனால், பல அரசு அதிகாரிகள் இதைக் கடைபிடிப்பது இல்லை. உதாரணத்துக்கு, தேர்தல் கமிஷனராக இருந்த டி.என். சேஷன், பதவியில் இருக்கும்போதே தன்னை சங்கரமட பக்தராக காட்டிக்கொள்ள தவறவில்லை. காவல்துறை அதிகாரிகள் பலரும் சபரிமலைக்கு மலை போட்டபடியே காக்கி உடையில் வருவதையும் காணமுடியும்.

அரசு மருத்துவமனைகள், அரசாங்க அலுவலகங்கள் ஏன் காவல் நிலைய வளாகத்துக்குள்ளேயே கோயில்கள் கட்ட அனுமதிக்கிறார்கள். அனுமதியில்லாமல் கட்டினாலும், அரசு எதிர்ப்பது இல்லை. சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை மாநகர போலீஸ் கமிஷனராக இருந்த ராஜகோபாலன், அமர்நாத் யாத்திரை சென்று வந்து காட்சிகளை தொலைக்காட்சியில் ஒளிபரப்பினார்கள். ‘என்னை இயக்குபவர் இவர்தான்’ என்றபடி தன் சட்டைப் பையில் இருந்து சங்கரசாரியின் படத்தை எடுத்துக்காட்டினார் ராஜகோபாலன். பல நீதிபதிகள் சாய்பாபா கோயிலிலும், மேல்மருவத்தூரிலும் நிற்கும் காட்சிகள் பத்திரிகைகளில் வரத்தானே செய்கின்றன. ராக்கெட் விடும் விஞ்ஞானிகள்கூட ராக்கெட் அனுப்பும் முன்பாக இந்துமத பூஜைகள் செய்கிறார்கள். இது எல்லாம், அரசு ஊழியர்களின் நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டவையே.

இதுபோன்றவைகள் எல்லாம் அரசால் தடுக்கப்படாதபோது, உமாசங்கரின் பிரசாரத்தை மட்டும் அரசு விதிகளுக்கு எதிராக இருக்கிறது என்றால், அது இந்திய அரசியல் சாசனம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைக்கு எதிரானது. வேலை நேரத்திலேயே தன் மத வெளிப்பாட்டை காட்டிகொள்ளும் பல அரசு அதிகாரிகள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் கட்டுபடுத்தாதபோது, தன் வேலை நேரம் தவிர்த்து ஓய்வு நேரத்தில் இயேசு பிரசாரம் செய்கிறேன் என்று உமாசங்கர் சொல்வதில் நியாயம் இருக்கிறது. மற்றபடி உமாசங்கரின் பிரசாரம், தினகரன் போன்ற பல பிரசங்கிகள் செய்கிற, அதே கூச்சல்… அலறல் பிரார்த்தனைதான்.

‘யாகம் வளர்த்தால் மழை வரும்’ என்கிற மூடநம்பிக்கைக்கு இணையாகத்தான் இருக்கிறது… ‘ஜெபம் மூலம் நோய் தீரும்’ என அவர் சொல்லியிருப்பது. படித்த ஒரு ஐ.ஏ.எஸ் அதிகாரியின் இத்தகைய மூடநம்பிக்கையான பேச்சுகள், எளிய மக்கள் மனதில் அழுத்தமாக பதியும்.

எல்லா மதத்தை சேர்ந்த அரசு அதிகாரிகளும், பொது ஊழியர்களும் இத்தகைய மத சார்ந்த விஷயங்களில் இருந்து தங்களை அற்புறப்படுத்திக்கொள்ள வேண்டும். அரசு அலுவலகங்களில் மதவழிபாடு சார்ந்த சின்னங்கள், அடையாளங்கள் வைக்கக்கூடாது என்று 1968 -ல் தமிழக அரசு ஆணையிட்டிருக்கிறது. அந்த அரசாணையை முழுமையாக நடைமுறைப்படுத்துவதற்கு, உமாசங்கரின் வழக்கு உதவும் என நம்புறேன்.

உமாசங்கரின் பிரசாரத்தைப் பகுத்தறிவு கொண்டு நாம் எதிர்ப்பது வேறு… இந்துமத மெஜாரிட்டியைக் கொண்டு ஒடுக்க நினைப்பது என்பது வேறு” என்று சொன்னார்.

Thanks to vikatan.com

Leave a Reply