சசிபெருமாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? தமிழக அரசு பதில் மனு
பூரண மதுவிலக்கு அமல்படுத்த கோரி தமிழகத்தில் உள்ள அனைத்து எதிர்க்கட்சிகளும், சமூக அமைப்புகளும் போராடி வரும் நிலையில், இந்த போராட்டத்தில் முதன்முதலாக தனது உயிரை இழந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவரது மரணம் சந்தேகத்தை ஏற்படுத்துவதாகவும், இதுகுறித்து விசாரணை நடத்தவேண்டும் என அனைத்து எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில் சசிபெருமாள் மரணம் தூக்குப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புப் போல இருக்கிறது” என்று தமிழக அரசு நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம், மார்த்தாண்டம் அருகே உள்ள உண்ணாமலைக்கடை பகுதியில் இருந்த டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி செல்போன் டவரில் ஏறி காந்தியவாதி சசிபெருமாள் போராட்டம் நடத்தினார். அப்போது அவர் திடீரென எதிர்பாராத நிலையில் உயிரிழந்தார். அவரது திடீர் மரணம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனால் மதுவிலக்கு கோரி மாணவர்கள் உள்பட பல அமைப்புகள் தீவிர போராட்டத்தில் இறங்கின.
இந்நிலையில், சசிபெருமாள் மரணம் குறித்து நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தக் கோரி அவரது மகன் விவேக் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இது குறித்து தாக்கல் செய்யப்பட்ட மனுவில், “எனது தந்தையின் மரணத்தில் மர்மம் இருக்கிறது. இதனால் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி அல்லது ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த வேண்டும்” என்று கூறி இருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. இந்த மனுவுக்கு வரும் 13ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி தலைமைச் செயலாளர், உள்துறை செயலாளர் ஆகியோர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ” மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லும் வழியிலேயே சசிபெருமாளின் உயிர் பிரிந்துள்ளது. அவரது மரணம் தூக்குப் போட்டுக் கொள்வதால் ஏற்படும் உயிரிழப்புப் போல இருக்கிறது என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இவ்வழக்கின் விசாரணையை, வரும் 31 ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.