சாலை விபத்தில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய வாலிபர் ஒருவருக்கு மனிதாபிமானத்துடன் அமைச்சர் விஜயபாஸ்கர் முதலுதவி செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சருமான விஜயபாஸ்கர், நேற்று மாலை ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது, மேட்டுச்சாலை என்ற இடத்தில் அரசு பேருந்து ஒன்றில் அடிபட்டு சாலை ஓரத்தில் ரத்த வெள்ளத்தில் ஒரு வாலிபர் உயிருக்கு போராடிக் கொண்டிருந்ததை பார்த்ததும் உடனே தன்னுடைய காரை நிறுத்த சொன்னார்.
உடனடியாக 108க்கு தனது செல்போனில் இருந்து தகவல் கொடுத்த அமைச்சர், அவரே ஒரு டாக்டர் என்பதால் அடிபட்டு கிடந்த வாலிபருக்கு மனிதாபிமானத்துடன் முதலுதவி செய்தார். மேலும் 108 வாகனம் வர தாமதமானதால் அதுவரை காத்திருக்க விரும்பாத அமைச்சர் தன்னுடைய பாதுகாப்பிற்காக வந்த வாகனத்தினை உடனே அழைத்து அந்த வாலிபரை அதில் ஏற்றி புதுக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தார்.
மேலும் அருகில் இருந்த மருத்துவமனைக்கு தகவல் கொடுத்த கொடுத்த அமைச்சர் அங்கிருந்த மருத்துவர்கள் மற்றும் நர்ஸ்களையும் தயாராக இருக்க உத்தரவிட்டார். மேலும் அடிபட்ட வாலிபரின் குடும்பத்திற்கும் தகவல் கொடுத்து அவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு செல்லவும் வாகனம் அனுப்பினார்.
அத்துடன் விட்டுவிடாமல் மருத்துவமனைக்கு சென்ற அமைச்சர், அந்த வாலிபருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை பற்றி மருத்துவர்களிடம் கேட்டறிந்தார். அந்த வாலிபரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறிய அமைச்சர், உடனே தனது சட்டை பையில் இருந்து ரூ.5 ஆயிரத்தை எடுத்து நிதி உதவியும் செய்தார். அந்த வாலிபரின் குடும்பத்தினர் அமைச்சரின் இந்த செயலுக்கு மனமுருகி நன்றி தெரிவித்து கொண்டனர். அதை தொடர்ந்து, மரணத்தின் பிடியில் இருந்த வாலிபரை காப்பாற்றிய மன நிறைவுடன் அமைச்சர் அங்கிருந்து கிளம்பி சென்றார்.
அமைச்சரின் இந்த மனிதாபிமானமிக்க செயலைக் கண்ட பொதுமக்கள் அவரை வெகுவாக பாராட்டி சென்றனர். இதேபோல், கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சென்னையில் விபத்தில் அடிபட்டு கிடந்த ஒருவரை தனது காரிலேயே அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு ஒரு ஆட்டோ பிடித்து அந்த மருத்துவமனைக்கு சென்று விசாரித்தவர் தான் அமைச்சர் விஜயபாஸ்கர் என்பது குறிப்பிடத்தக்கது.