இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம். ராஜபக்சே கடும் எதிர்ப்பு

இலங்கை சுதந்திர தினத்தில் தமிழில் தேசிய கீதம். ராஜபக்சே கடும் எதிர்ப்பு
rajapakse
இலங்கையில் கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ராஜபக்சேவை தோற்கடித்து அதிபர் பதவி ஏற்ற சிறிசேனா, தமிழர்களுக்கு கூடுதல் சலுகைகள் மற்றும் அதிகாரங்களை வழங்கி வருகிறார். இந்நிலையில் கடந்த 2010ஆம் ஆண்டு ராஜபக்சே அதிபராக இருந்தபோது தமிழில் தேசிய கீதம் பாட விதிக்கப்பட்ட தடையை தற்போதைய அதிபர் சிறிசேனா நீக்கியுள்ளார். இதன்மூலம் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் தமிழில் தேசிய கீதம் இலங்கையில் ஒலிக்கவிருக்கின்றது.

இன்று இலங்கையில் 68வது சுதந்திர தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த சுதந்திர தினத்தில் சிங்கள மொழியுடன், தமிழிலும் தேசிய கீதம் பாடப்பட்டது. தமிழில் தேசிய கீதம் பாடும் இந்த நடவடிக்கைக்கு முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சே, ஜாதிக ஹெல உறுமய கட்சி தலைவர் உதய கம்மன்பில ஆகியோர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவை மகிழ்ச்சி படுத்துவதற்காகவே தேசிய கீதத்தை தமிழில் பாடுவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இந்தியாவில் தமிழ் மொழி பேசப்பட்டு வரும் தமிழகத்தில் கூட தேசிய கீதம் தமிழில் பாடப்படுவதில்லை என்றும் ராஜபக்சே தெரிவித்துள்ளார். அதே நேரத்தில் தேசிய கீதம் தமிழில் பாட வேண்டும் என்ற தனது முயற்சிக்கு தற்போது வெற்றி கிடைத்துள்ளது என மந்திரி மனோகணேசன் கூறியுள்ளார்.

Leave a Reply