ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற ‘ஸ்பெல்லிங் பீ’ என்னும் மிக அதிகமான ஆங்கில எழுத்துக்களை கொண்ட சொற்றொடரை வாசிக்கும் போட்டியில் தமிழக தம்பதியரின் 9 வயது மகன் அனிருத் கதிர்வேல் என்ற சிறுவன் சாம்பியன் பட்டத்தை வென்றார். வெற்றி பெற்ற இந்த சிறுவனுக்கு 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசு அளிக்கப்பட்டது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த அனிருத்தின் பெற்றோரான பிரிதிவி ராஜ்- சுஜாதா தம்பதியர் 16 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலியாவில் குடியேறி, மெல்போர்ன் நகரில் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஒரு பள்ளியில் படித்துவரும் அனிருத் முதல் வகுப்பு மாணவனாக இருந்த வேளையில் இருந்தே ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ‘ஸ்பெல்லிங் பீ’ போட்டியில் ஆர்வத்துடன் பங்கேற்று வந்தான்.
இந்த ஆண்டு நடைபெற்ற போட்டியில் ஆஸ்திரேலியா மற்றும் மற்ற வெளிநாட்டு மாணவர்கள் அனைவரரயும் பின்னுக்குத்தள்ளி விட்டு சாம்பியன் பட்டத்தை அனிருத் வென்றுள்ளான். மேலும், அவனது கல்விக்கான உதவித்தொகையாக 50 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டது. இந்த தொகை இந்திய மதிப்புக்கு சுமார் 23 லட்சம் ரூபாய்க்கு சமமாகும். மேலும் அவனது பள்ளிக்கு தேவையான சுமார் 10 ஆயிரம் ஆஸ்திரேலிய டாலர்கள் மதிப்புள்ள உபகரணங்களும் பரிசாக வழங்கப்பட்டுள்ளன.
சாம்பியன் பட்டத்தை அனிருத் வென்றதாக நேற்று அறிவிக்கப்பட்டபோது, இது கனவா, நிஜமா? என்று நம்ப முடியாத அனிருத், உடன் இருந்த இதர மாணவர்களிடம் தன்னை கிள்ளும்படி கூறி, உண்மையிலேயே நாம் சாம்பியன் ஆகி விட்டோம் என்பதை உறுதிப்படுத்திக் கொண்டதாக ஆஸ்திரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.