கடந்த சில நாட்களுக்கு முன்னர் திருச்சியில் புதிய கட்சியின் தொடக்கவிழாவில் பேசிய ஜி.கே.வாசன், தங்களது கட்சியின் சின்னமாக ‘சைக்கிள்’ இருக்கும் என்று கூறினார். ஜி.கே.வாசனின் இந்த பேச்சுக்கு தமிழக முன்னேற்ற காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் நிறுவனத்தலைவர் எஸ்.அருள்தாஸ் விடுத்துள்ள ஒரு அறிக்கையில், “தமிழக முன்னேற்ற காங்கிரஸ் 2012 மே மாதம் 7–ந்தேதி துவக்கப்பட்டு முறையாக தேர்தல் ஆணையத்தால் பதிவு செய்யப்பட்டு, தமிழக மக்களுக்காக எங்கள் பணியினை செய்து கொண்டு இருக்கின்றோம். கட்சி துவக்கப்பட்ட நாளிலேயே எங்கள் கட்சியின் அதிகாரப்பூர்வ கொடியாக சைக்கிள் சின்னம் பொறிக்கப்பட்ட கொடியை அறிமுகம் செய்துள்ளோம்.
இந்நிலையில் ஜி.கே.வாசனின் புதிய கட்சி துவக்க விழாவில் தங்களது கட்சியின் சின்னமாக சைக்கிள் சின்னம் இருக்கும் என்று அறிவித்துள்ளார். இது நாட்டு மக்களையும், அவருடைய கட்சியினரையும் தேர்தல் கமிஷனையும் ஏமாற்றுகின்ற, மோசடி செய்கின்ற செயலாகும். தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெறாமலே, சின்னத்தை அறிவித்திருப்பது தேர்தல் ஆணையத்தின் விதிமுறைகளை மீறிய செயலாகும்.
எனவே வாசன் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.