25 இடங்களில் போட்டி. 209 தொகுதிகளில் மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு. தமிழருவி மணியன்
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் கூட்டணி குறித்த வியூகங்களை அமைத்து வருகின்றன. பலமான அதிமுகவை வீழ்த்த அதைவிட பலமான கூட்டணி ஏற்படுத்த முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வரும் சட்டமன்ற தேர்தலின்போது வைகோ தலைமையிலான மக்கள் நல கூட்டணிக்கு ஆதரவு அளிக்கப்படும் என காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.
காந்திய மக்கள் இயக்கத்தின் மாநில, மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அதன் நிறுவன தலைவர் தமிழருவி மணியன் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ”நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வரி சீர்திருத்தம் முக்கியமானது. எனவே, நடப்பு நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் சரக்கு சேவை வரி மசோதாவை சட்டமாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள், எதிரி கட்சிகள் போல இல்லாமல் ஆரோக்கியமாக செயல்பட வேண்டும். மதசகிப்பின்மை, மாட்டிறைச்சி விவகாரம், வி.கே.சிங்கின் தரக்குறைவான பேச்சு ஆகியவற்றால் பா.ஜ.க அரசுக்கு எதிராக நாடு முழுவதும் களம் அமைந்துள்ளது. இந்தியாவில் சகிப்புத்தன்மைக்கு மாறான நிலைப்பாட்டை கொண்டிருந்தால் அதற்கு எவ்வளவு பெரிய விளைவை சந்திக்க வேண்டும் என்பதை பிகார் தேர்தல் முடிவுகள் உணர்த்தியிருக்கின்றன.
தமிழகத்தில் வெள்ளச் சேதங்களுக்கு காரணம் நீர்நிலைகள் ஆக்கிரமிப்புதான். தமிழகத்தில் மழை வெள்ளம் தடுப்பு பணி, வெள்ள மேலாண்மை திட்டத்திற்கு என பல ஆயிரம் கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், செயல்கள் எதுவும் நடக்கவில்லை. வெள்ளத்தடுப்பு பணி, மேலாண்மை திட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். மானியங்களுக்காகவும், இலவசங்களுக்காகவும் ரூ.60,000 கோடியை ஒதுக்கீடு செய்யும் மாநில அரசு, தடுப்பணைகள் கட்டுவதற்காகவும், ஆறுகளை இணைக்கும் திட்டங்களுக்காகவும் போதிய நிதியை ஒதுக்கீடு செய்வதில்லை.
தமிழகத்தில் மதுவிலக்கை உடனடியாக அமல்படுத்துவது என்பது இயலாத காரியம். எனவே 21 வயதுக்குட்பட்ட இளைஞர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது, தினமும் 5 மணி நேரம் மட்டுமே மதுக்கடை திறந்திருக்க வேண்டும். குடியிருப்பு, வழிபாட்டு தலங்கள், பள்ளிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை உடனே அகற்ற வேண்டும். மாதந்தோறும் கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாகக் குறைப்பதன் மூலம் படிப்படியாக மதுவிலக்கை மாநிலத்தில் அமல்படுத்தலாம். மதுவற்ற மாநிலமும், ஊழலற்ற ஆட்சியும் அமைப்பதுதான் காந்திய மக்கள் இயக்கத்தின் கொள்கை.
காந்திய மக்கள் இயக்கத்துக்கு மக்கள் மத்தியில் உள்ள ஆதரவை தெரிந்து கொள்ளவே வரும் பேரவைத் தேர்தலில் 25 தொகுதிகளில் நாங்கள் போட்டியிடுகிறோம். மற்ற 209 தொகுதிகளில் மக்கள் நலக் கூட்டியகத்துக்கு ஆதரவு அளிக்கப்படும்” என்றார்.