நடக்கவும் வேண்டாம், அடிக்கவும் வேண்டாம். மு.க.ஸ்டாலினுக்கு தமிழிசை அறிவுரை
திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் ‘நமக்கு நாமே’ என்ற பெயரில் முதல்கட்டமாக கன்னியாகுமரி முதல் திருச்சி வரை பயணம் செய்து பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களிடம் குறைகளை கேட்டார். தற்போது இரண்டாவது கட்டமாக அவர் சுற்றுப்பயணம் செய்து வரும் நிலையில் இவரது பயணம் குறித்து பல்வேறு விமர்சனங்கள் வருகின்றது. ஏற்கனவே இந்த பயணம் குறித்து வைகோ உள்ளிட்ட பல தலைவர்கள் விமர்சனம் செய்துள்ள நிலையில் தற்போது பாஜக தமிழக தலைவர் தமிழிசை செளந்திரராஜனும் இந்த பயணத்தை விமர்சனம் செய்துள்ளார்.
நேற்று தமிழிசை ஒரு தனியார் தொலைக்காட்சி அளித்த பேட்டியில் கூறியதாவது, “தி.மு.க பொருளாளர் ஸ்டாலின் நடக்க வேண்டாம், நடிக்க வேண்டாம் அதோடு தொண்டர்களை அடிக்கவும் வேண்டாமென ஒரு மருத்துவராக அவருக்கு அறிவுரை கூறுகின்றேன்’ என்று கூறினார்.
நீலகிரி மாவட்ட சுற்றுப்பயணத்தின் போது மு.க.ஸ்டாலினுடன் செல்பி எடுக்க முயன்ற தொண்டர் ஒருவரை கன்னத்தில் அடித்ததாக புகார் எழுந்தது. இந்த புகாரை அடுத்தே தமிழிசை இவ்வாறு விமர்சித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது..