பருப்பை பதுக்கியது பாஜக வியாபாரிகளா? ஈ.வி.கே.எஸ் இளங்கோவனுக்கு தமிழிசை கண்டனம்
கடந்த சில நாட்களாக பருப்பு விலை வரலாறு காணாத அளவில் உயர்ந்து கொண்டே சென்றதை அடுத்து மத்திய மாநில அரசுகளின் அதிரடி ரெய்டு காரணமாக ஆயிரக்கணக்கான கிலோ பதுக்கி வைக்கப்பட்டிருந்த பருப்புகள் மீட்கப்பட்டன. இந்நிலையில் பருப்பு பதுக்கலை தடுக்க மத்திய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வரும் நிலையில் பருப்பு பதுக்கலுக்கு பாஜக ஆதரவு வியாபாரிகளே காரணம் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கூறியுள்ளார். இதற்கு தமிழக பாஜகவின் தலைவர் தமிழிசை செளந்திரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து இன்று தமிழிசை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது: “எதற்கெடுத்தாலும் பாஜக மீது பழிபோடும் உணர்வுடனே காங்கிரஸ் செயல்படுகிறது. பாஜக வியாபாரிகள் பருப்பு பதுக்குவதாக கூறி இருப்பது கண்டனத்துக்குரியது. இது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. மத்திய அரசு நடவடிக்கையில் பாரதிய ஜனதா ஆளும் மாநிலங்களில் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டது போலவே காங்கிரஸ் ஆளும் மாநிலங்களிலும் பருப்பு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
அதற்காக காங்கிரஸ்காரர்கள்தான் பருப்பு பதுக்குவதாக கூற முடியுமா? மத்திய அரசு பாரபட்சமின்றி நடவடிக்கை எடுத்து வருகிறது. வியாபாரிகள் செய்யும் தவறால் தட்டுப்பாடு செயற்கையாக உருவாக்கப்படுகிறது. பதுக்கல் இல்லை என்றால் பொருட்கள் விலை குறையும், கட்டுக்குள் இருக்கும்.
நாடு முழுவதும் பதுக்கல்காரர்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கை மற்றும் பருப்பு இறக்குமதி காரணமாக விரைவில் விலை குறையும்” என்று மேலும் கூறியுள்ளார்.